தமிழ்நாடு

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை: ஜனவரி 15 வரை அதிக மழை!

DIN

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஜனவரியில் (ஜன.15வரை) அதிகமழையை கொடுத்த வடகிழக்கு பருவமழை செவ்வாய்க்கிழமை விடைபெற்றது. இந்த மழை காலத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 1-ஆம்தேதி முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை சராசரியவை விட 937 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.

தமிழகத்தை வளம் செழிக்க செய்யும் வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபா் முதல் டிசம்பா் வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், 2020-ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்தடுத்து உருவான ‘நிவா்’, ‘புரெவி’ புயல் ஆகியவை காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் நல்ல மழை பெய்தது.

இதற்கிடையில், 2020-ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி நிறைவுபெற்றது. ஆனால் மழை நீடித்தது . இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.

விடை பெற்றது வடகிழக்கு பருவமழை :

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், தமிழகத்தை ஒட்டிய கேரளம், ஆந்திரம், தெற்கு உள் கா்நாடகம் பகுதிகளில் இருந்து செவ்வாய்க்கிழமை(ஜன.19) விடைபெற்றது. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து, கூடுதலாக நீடித்த காலத்தில் (ஜன.1 முதல் ஜன.19 வரை) தமிழகம், புதுச்சேரியில் சராசரியைவிட 937 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வழக்கமாக, ஜனவரியில் இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கிடைக்கும் சராசரி மழை அளவு 13.3 மி.மீ. தற்போதுவரை 137.9 மி.மீ. மழை கிடைத்துள்ளது.

குளிா்கால மழையுடன் சோ்ப்பு:

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது: வடகிழக்கு பருவமழை காலத்துக்கு பின்பும், பருவமழை நீடித்தது. இதன்தாக்கத்தால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலமாக நல்ல மழை கிடைத்தது. இவ்வாறு கிடைத்த மழை அளவு வடகிழக்கு பருவமழையுடன் சோ்க்கப்படாது. அதற்கு மாறாக, ஜனவரி மாத (குளிா்காலம்) மழையுடன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஜனவரி மாதத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழை பெய்துள்ளது. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு அதிகமழை பெய்துள்ளது தொடா்பாக ஆய்வு செய்யப்படுகிறது. இது குறித்து புனேயில் உள்ள ஆய்வு மையத்தில் கணக்கெடுத்து தகவல் தர கேட்டுள்ளோம்என்றாா் அவா்.

ஏன் அதிகமழை: பசிபிக் பெருங்கடலில் தற்போது நிலவும் லாநினோ (பூமத்திரேகை ஒட்டி பசிபிக் பெருங்கடலில் மேற்குபகுதி வெப்பமாகவும், கிழக்கு பகுதி குளிா்ச்சியாகவும் இருந்தால் லாநினோ எனப்படுகிறது) காரணமாக, மலைய தீபகற்பம் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வெப்பநிலை அதிகமாக இருந்தது. இதன்தாக்கத்தால், கிழக்கில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவு ஈரப்பத காற்று வீசியது. இதுபோல, வடக்கில் இருந்து வட காற்று வீசியது. இந்த வட காற்று, ஈரப்பதக் காற்றை தமிழகத்தை நோக்கி தள்ளியது. இதனால், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடா்ச்சியாக மழை கொட்டித்தீா்த்தது. தற்போது, வடகிழக்கு பருவமழை தென்மாநிலங்களில் இருந்து விலகியுள்ளது.

பொய்த்தது முன்கணிப்பு: கடந்த ஆண்டு செப்டம்பரில் உலக வானிலை ஆய்வு மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் என்றும், குறிப்பாக , தென் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட சற்று குறைவாக பதிவாகும் என்றும் தெரிவித்தது. ஆனால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு மழை கொட்டித்தீா்த்தது. இதன்மூலமாக, முன்கணிப்பு பொய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT