தமிழ்நாடு

அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக காணாமல் போய்விடும்: காஞ்சிபுரத்தில் முதல்வர் பேச்சு

DIN

காஞ்சிபுரம்: அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக காணாமல் போய் விடும் என காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் காந்திரோடு தேரடி அருகே திறந்த வேனில் நின்று கொண்டே அவர் பேசியது.

நான் முதல்வராக பொறுப்பேற்ற போது  ஒரு மாதமோ அல்லது 6  மாதத்துக்கு மேலாகவோ முதல்வராக  நீடிக்க மாட்டேன் என்றார் மு.க.ஸ்டாலின். ஆனால், 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடத்தி இப்போது 5 ஆவது ஆண்டும் நிறைவுறும் வகையில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். எப்படியாவது கட்சியை உடைத்து விட வேண்டும். ஆட்சியைக் கலைத்து விட வேண்டும் என்பதே அவரது கனவாக இருக்கிறது. முதல்வர் கனவிலேயே ஸ்டாலினுக்கு தூக்கமும் போய்விட்டது. அதிமுகவை தொட்டுக்கூடப் பார்க்க ஸ்டாலினால் முடியாது.

அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடும். இப்போது கருணாநிதியின் மகன் அழகிரியும் புதியதாக கட்சி தொடங்கப் போகிறார். எனவே, திமுக உடையும் நிலைக்கு வந்து விட்டது. நான் சிறுக, சிறுக முன்னேறி முதல்வர் வரை உயர்ந்திருக்கிறேன். ஆனால், ஸ்டாலின் அப்படியில்லை. அப்பா பேரவை உறுப்பினராகவும், முதல்வராகவும் இருந்ததால் கட்சியின் தலைவராக முடிந்தது. தயவு செய்து அதிமுகவை உடைக்கும் எண்ணத்தையும், ஆட்சியையும் கவிழ்க்கும் எண்ணத்தையும் ஸ்டாலின் விட்டுவிட வேண்டும். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தால் எதிர்க்கட்சி வரிசையிலாவது உட்கார முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நாங்கள் மக்களுக்கு செய்த திட்டங்களை, சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். நீங்களும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லி வாக்கு  சேகரியுங்கள். உங்கள் ஆட்சிக் காலத்தில் நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்பதால் எதையும் சொல்ல முடியவில்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றீர்கள். வரக்கூடிய தேர்தலில் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்.

திகமுவின் முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் செய்ததாக வழக்கு நடந்து வருகிறது. இதன் தீர்ப்பு வரும்போது திமுக இங்கே இருக்குமா என்பதே சந்தேகம். இதை மறைப்பதற்காக யாரோ எழுதிக் கொடுத்ததை தயாரித்து பொய்யான புகார்களுடன் அதிமுக அரசு மீது ஆளுநரிடம் புகார் கொடுத்தது திமுக. ஸ்பெக்டிரம் ஊழலில் 1.07 லட்சம் கோடி ஊழல் செய்து இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய திமுக என்பதை மக்கள் மறந்து விட மாட்டார்கள். திமுக ஆட்சியில் இருந்தபோது விலை உயர்ந்த நிலங்கள் பலவற்றை பட்டா போட்டு அபகரித்தது. இதனை அறிந்த ஜெயலலிதா நில அபகரிப்பு பிரிவு என்று ஒரு பிரிவையே ஏற்படுத்தி பல பேரின் நிலங்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்துள்ளது. எந்தவித துண்டுச் சீட்டும் இல்லாமல் மு.க.ஸ்டாலினுடன் எந்த இடத்திலும் பேசத் தயாராக இருக்கிறேன். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்பதால் எனக்கு எந்த பயமும் இல்லை. மு.க.ஸ்டாலின் என்னுடன் பேசத்தயாரா என்பதை கேட்டுச் சொல்லுங்கள்.

ஸ்டாலின் மகன் உதயநிதி எங்களை இழிவாகப் பேசுகிறார். பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார். பெண்களை மதிக்காதவர்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். சாமியே இல்லை என்று கூறியவர்கள் இப்போது கோயில், கோயிலாக ஏறிக்கொண்டிருக்கிறார்கள். என் மனைவி எல்லாக் கோயில்களுக்கும் சென்று வருகிறார் என ஸ்டாலினே சொல்கிறார். தெய்வத்தை உதாசீனப்படுத்தியவர்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் எங்கள் ஆட்சிக் காலத்தில் நடந்தது அதிமுக அரசுக்கு கிடைத்த பாக்கியம். இந்த வைபவத்தின் போது 1.7 கோடி பேர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். இந்த விழாவையும் மிகச்சிறப்பாக நடத்தியது அதிமுக அரசு. கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் அதிகமான பரிசோதனைகளை செய்து கரோனாவை கட்டுப்படுத்தி இருக்கிறோம். இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமரும் பாராட்டியிருக்கிறார்.

ஒரே ஆண்டில் 10க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி இந்த ஆண்டு மட்டும் 313 பேர் பொது மருத்துவம் படிக்கவும், 93 பேர் பல் மருத்துவம் படிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தினோம். வரும்  ஆண்டில் 443  பேர் பொது மருத்துவமும் 105 பேர் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப் பேரவையில் சட்டமாக்கி  இருக்கிறோம். நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்ட போது அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அதை எதிர்த்திருந்தால்  நீட் தேர்வு  வந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.

தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறது. சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வோம். இம்மாதம் 27 ஆம் தேதி சென்னையில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் உட்பட அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

தமிழக முதல்வருடன் அமைச்சர் பா.பென்ஜமின், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.கே.பழனி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

SCROLL FOR NEXT