தமிழ்நாடு

புதுவை திமுக முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்: மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

DIN


புதுச்சேரி: புதுவை மாநில திமுக முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் என மாநில திமுக அமைப்பாளர்கள் அறிவித்தனர்.

புதுவை மாநில திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்எல்ஏ பேசியதாவது: 
புதுவை காங்கிரஸ் ஆட்சியில் நமது சுயமரியாதை, தன்மானம் அடகு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆட்சியால் கூட்டணிக் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும், ஏன் காங்கிரஸ் கட்சியினருக்கும்கூட எந்தப் பயனும் இல்லை.

துணைநிலை ஆளுநரைக் குறை கூறி காலம் கடத்தும் அரசாக உள்ளது. வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவைத் துணைத் தலைவரே அரசையும், அமைச்சர்களையும் விமர்சிக்கிறார். பெரும்பான்மை இல்லாத நிலையில், சட்டப்பேரவை கூட்டப்பட்டது. 

புதுவையில் திமுக தலைமையில் ஆட்சி மலரும். முதல்வராக ஜெகத்ரட்சகன் பதவியேற்பார். புதுவையை நாங்கள் மாற்றிக் காட்டுவோம்  என்றார் அவர்.

வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார்: புதுவையை முன்னர் ஆட்சி செய்த என்.ரங்கசாமி மாநிலத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றார். தற்போது ஆளும் நாராயணசாமி மேலும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறார். திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதியில் வேண்டுமென்றே சட்டப்பேரவையைக் கூட்டினர். 

புதுவையில் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றார் அவர்.

கூட்டத்தில் மாநில திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.

புதுவை எனது தாய் மண்
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசியதாவது: திமுக தலைமையில்  ஏற்கெனவே ஆட்சி அமைந்த மண் புதுவை. இந்த மண்ணில்  மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். இங்குள்ள அனைவரின் உணர்வுகளை மு.க.ஸ்டாலினிடம் சொல்வேன். புதுவையில் தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. பல குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டன. புதுவையில் வருவாயைப் பெருக்க நான் பல திட்டங்களை வைத்துள்ளேன்.

புதுவை எனது தாய் மண். இந்த மாநிலத்தைச் சொர்க்கமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுப்பது பெரிய விஷயமா? ஓராண்டில் அதை நிறைவேற்றிக் காட்டுவோம்.

புதுவையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார். என்னிடம் தேர்தல் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அதைச் சிறந்த முறையில் மேற்கொள்வேன். 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால்தான் நான் இங்கே மீண்டும் வருவேன். இல்லாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT