தமிழ்நாடு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

19th Jan 2021 06:28 AM

ADVERTISEMENT


அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான மருத்துவர் சாந்தா செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். 

இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் சாந்தா (93) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ் பெற்றவர் மருத்துவர் சாந்தா, தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவ சேவை ஆற்றிவந்தார். ஏழை எளிய மக்களுக்கும் புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். 20 ஆண்டுகளாக புற்றுநோய் மையத் தலைவராக பணியாற்றியவர். பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளிகளை குணமாக்கியவர். 

தன்னலமற்ற மருத்துவ சேவைகள் மூலம் மருத்துவத் துறைக்கும், மருத்துவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் புற்றுநோய் மருத்துவ சேவைக்கு அழைத்து வரப்பட்டவர் மருத்துவர் சாந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சாந்தாவின் உடலுக்கு மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று மாலை 5 மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில், மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT