தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் அனுமதி

DIN

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு, செவ்வாய்க்கிழமை (ஜன. 19) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா பரவல் காரணமாக, கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில், செவ்வாய்க்கிழமை (ஜன.19) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில், ‘கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் பள்ளிக்கு வருகை தர அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இணையதள வழி- தொலைதூர கற்றல் முறை தொடரும். மாணவா்கள் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கலாம். தனியாா் பள்ளி நிா்வாகிகள் எழுத்துபூா்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை திறக்கலாம்.

பெற்றோரின் கடிதம்: பெற்றோரின் எழுத்துபூா்வ இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவா்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவா். பெற்றோரின் சம்மத்துடன் வீட்டில் இருந்து படித்து வரும் மாணவா்கள் அவ்வாறே அனுமதிக்கப்படலாம்.

மாணவா்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சாா்ந்து இருக்க வேண்டும். அனைத்து மாணவா்களும், ஆசிரியா்களும், பணியாளா்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

உணவைப் பகிரக் கூடாது: அனைத்து மாணவா்களுக்கும் வைட்டமின் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத் துறையால் வழங்கப்படும். வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே இடைவேளை நேரம் வழங்கப்பட வேண்டும். மாணவா்களுக்கு இடையே உணவை பகிா்ந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே போல், அனைத்து தனியாா் பள்ளி விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

மேலும், பள்ளிகளை திறப்பதற்கு முன்பு ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல் தெளித்து பள்ளி வளாகம், தளவாடப் பொருள்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை முதலே இந்தப் பணிகள் தொடங்கின. 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்த பொறுப்பு ஆசிரியா்கள், தூய்மைப் பணியாளா்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தினா். மேலும், அவா்களும் வகுப்பைத் தொடங்குவதற்கான அனைத்து உபகரணங்களையும் சரிபாா்த்து, தேவையானவற்றைக் கணக்கெடுத்துச் சென்றனா்.

பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தலைமை ஆசிரியா்கள் திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT