தமிழ்நாடு

காலிங்கராயன் வாய்க்கால் கழிவுநீர் வாய்க்காலாக மாறுவதை தடுக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்

18th Jan 2021 02:35 PM

ADVERTISEMENT

 

காலிங்கராயன் வாய்க்கால், கழிவுநீர் வாய்க்காலாக மாறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பவானியில் காலிங்கராயன் தின விழாவில் அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்த ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது : 

கங்கை காவிரி இணைப்பு திட்டம் பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தாலும் தேர்தல் வாக்குறுதியாகவே உள்ளது. இதனை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளிடம் எவ்வித திட்டமும் இல்லை.

ADVERTISEMENT

காவிரி கோதாவரி நதிகள் இணைக்கப்படும் என கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கூட்டங்களிலும் தொடர்ந்து இத்திட்டத்தை கூறி வருகிறார். ஆனால், இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நதிகள் இணைப்பு என்பது நமது நாட்டின் முக்கியத் தேவையாக உள்ளது.

நதிகள் இணைக்கப்படுவதன் மூலம் விவசாயம் மேம்படுவதோடு, நீர்வழிப் போக்குவரத்தும் அதிகரிக்கும்.  நதிகள் இணைப்புக்கு முன்மாதிரி வாய்க்காலான காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது கழிவுநீர் அதிக அளவு கலந்து வருகிறது. கரோனா காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்ததால் வாய்க்கால் தண்ணீர் சுத்தமாக சென்றது. 

கரோனா தளர்வுகளுக்கு பின்னர் தற்போது அதிக அளவில் கழிவுநீர் கலந்து வருகிறது. எதிர்காலத்தில் காலிங்கராயன் வாய்க்கால் கழிவுநீர் வாய்க்காலாக மாறும் நிலை உள்ளது இதனை தடுக்க வேண்டும்.

உலக அளவில் கரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடம் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை ஆட்சியாளர்கள் போக்க வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT