தமிழ்நாடு

நிரம்பிய கரியகோவில், ஆனைமடுவு அணைகள்: குவியும் சுற்றுலாப் பயணிகள்

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை மற்றும் அருநுாற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணைகள் தண்ணீர் நிறைந்து ரம்மியமாக காட்சி அளிப்பதால், பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் அணையின் அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கிழக்குப் பகுதியான அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூர், ஏத்தாப்பூர் மற்றும் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் எவ்வித பொழுதுபோக்கு மையங்களோ, சுற்றுலாத்தலங்களோ இல்லை. எனவே, பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்களில்  குடும்பத்தோடு சென்று பொழுதுபோக்கிடவும், குழந்தைகளை மகிழ்விக்கவும், மேட்டூர் அணை, குருமம்பட்டி உயிரியல் பூங்கா, ஏற்காடு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலுார், ஆத்தூர் ஆனைவாரி முட்டல் படகுத்துறை நீர்வீழ்ச்சிக்கு, அதிக நேரம் மற்றும் பணம் செலவழித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

மாமாஞ்சி நீரோடை அருவியில் குளித்து மகிழும் பெண்கள்.

இதனால் பெரும்பாலான மக்கள், விழாக்காலங்கள், விடுமுறை தினங்களிலும் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றனர். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலையின் வடமேற்கு பகுதியிலிருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள், சங்கமித்து உற்பத்தியாகும் கரியகோவில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியகோவில் அணை அமைந்துள்ளது.

வாழப்பாடி வட்டம் அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே வாழப்பாடியிலிருந்து 20 கி.மீ., தூரத்தில் புழுதிக்குட்டை கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இரு மலைக்குன்றுகளுக்கு இடையே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 283 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள், காணும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, ஆடி18  உள்ளிட்ட பண்டிகை தினங்களிலும், வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை நாட்களிலும், குடும்பத்தோடு இந்த அணைகளுக்குச் சென்று பொழுதுபோக்கி மகிழ்ந்து வந்தனர்.

கரியகோவில் அணை கரையோர பகுதியில் குளித்து மகிழும் குழந்தைகள்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இரு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை இல்லாததால், நீர்மட்டம் குறைந்து குட்டை போல காணப்பட்டன. இதனால், இந்த அணைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து பெய்த பருவ மழையால், கரியகோவில் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. ஆனைமடுவு அணை மொத்தமுள்ள 67 அடியில் 65 அடியை எட்டியது. 

9 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணைகளும் தண்ணீர் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி பல்வேறு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள்,  சுற்றுலாப் பயணிகள் பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்களில் பொழுதுபோக்கு மகிழ்ந்திட இந்த அணைகளுக்குக் குவிந்து வருகின்றனர். இதனால் இரு அணைகளும் சுற்றுலாத் தலங்களைப் போல் மாறி வருகின்றன.

மாமாஞ்சி அருவியில் குளித்து மகிழும் பெண்கள்

குறிப்பாக, பச்சைபசேலென காணப்படும் இயற்கை சூழலில் குளிர்ந்த காற்று வீசும் அணைப் பகுதிகளுக்குச் சென்று பொழுதுபோக்குவதில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இரு அணைகளிலும் சிறுவர்களையும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க, சிறுவர் பூங்கா, ராட்டினங்கள், சிற்றுண்டிச் சாலைகள், புல்தரைகள், இருக்கைகள் நீரூற்றுகள்,  தங்கும் குடில்கள் அமைத்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அணைகளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமாஞ்சியில் திடீர் நீர்வீழ்ச்சி!

கல்வராயன் மலைத்தொடர் நெய்யமலை வனப்பகுதியிலிருந்து வழிந்தோடி வரும், மாமாஞ்சி நீரோடையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நீரோடையில், தும்பல் ஊராட்சி மாமாஞ்சி கிராமத்தின் வடமேற்கு பகுதியில்  தண்ணீர் அருவியாய்  கொட்டுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கரடுமுரடான மலைப்பாதையில் மாமாஞ்சி நீரோடை நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்று தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT