தமிழ்நாடு

'வகுப்பறைகளில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதி'

18th Jan 2021 04:57 PM

ADVERTISEMENT

 

ஜனவரி 19 செவ்வாய்க்கிழமை முதல் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்பட உள்ளதையொட்டி, பனங்குடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்ட பின் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா, ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மேல் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவித்தார். 

செவ்வாய்க்கிழமை முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் செயல்பட உள்ளதையொட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சாந்தா பார்வையிட்டு ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

ADVERTISEMENT

கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தொற்றின் வேகம் குறைந்து வருவதன் அடிப்படையில், இந்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, முதல் கட்டமாகப் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்குச் செவ்வாய்க்கிழமை முதல், கரோனாத் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்றி வகுப்புகள் நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி வகுப்புகளுக்கு வருகின்ற மாணவ-மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. பள்ளியின் வகுப்பறை உள்ளிட்ட வளாகம் முழுவதும் கிருமி நாசினித் தெளித்துத் தினசரி இருமுறைச் சுத்தம் செய்திட வேண்டும். 

மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் உடல் வெப்பநிலைப் பரிசோதனை செய்திட வேண்டும். மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி கிருமிநாசினிக் கொண்டு கைகளைக் கழுவிட வேண்டும் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கல்வித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், அனைத்துப் பள்ளிகளிலும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பனங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்கொண்ட ஆய்வின் போது வருவாய்க் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சந்தானம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், பள்ளித் தலைமையாசிரியர் ரவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT