தமிழ்நாடு

நீர்ப்பாசனத் திட்டங்களை ‌முதல்வர் நிறைவேற்றவில்லை: மு.க.ஸ்டாலின்

DIN

தருமபுரி: வாக்குறுதி அளித்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நீர்ப்பாசனத் திட்டங்களை ‌முதல்வர் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட தூள்செட்டி ஏரியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: மாற்றுத்திறாளிகள் நலத்துறைக்கு திமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்தத் துறையை மேம்படுத்த அப்போதைய முதல்வர் கருணாநிதி தன் வசம் வைத்துக்கொண்டார். சுய உதவிக்குழுவை தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலில் தொடங்கி வைத்தார்.

இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மக்களைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன், நீண்ட நாட்களாக இத்தொகுதிக்கு எம்எல்ஏவாக இருக்கிறார். உயர்கல்வி துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.  இவருக்கு மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வு பற்றி கவலையில்லை. இதை திமுகவும் ஏற்கவில்லை. அதிமுகவின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், ஏற்கவில்லை. ஆனால்‌ தற்போதைய முதல்வராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி நீட் தேர்வை ஆதரித்து விட்டார். இத்தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் பலனில்லை. அதேபோல அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் முயற்சி நடைபெற்றது. இதிலும் உயர் கல்வித்துறை  அமைச்சர் அன்பழகன் கண்டுக் கொள்ளவில்லை.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளோரைடு கலந்த குடிநீர் பருகி வந்தனர். இதனால் இவ்விரு மாவட்ட மக்களுக்கும் பற்சிதைவு, எலும்பு உருக்கி நோய் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் 80 ‌சதவீதப் பணிகள் இத்திட்டத்தில் நிறைவு செய்யப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைத்தவுடன் இத்திட்டத்தின் மீது அக்கறை செலுத்தவில்லை. 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தூள் செட்டி ஏரியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதனால் முழுமையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. தேர்தலுக்கு பின்பு திமுக ஆட்சி அமைத்தவுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் இரண்டு மாவட்ட மக்களுக்கும் முழுமையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான தென்பெண்ணை ஆற்றில் இருந்து தும்பல அள்ளி அணைக்கு கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மற்றும் அலியாளம் அணைக்கட்டிலிருந்து பாலக்கோடு பகுதியில் உள்ள தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் இணைப்புக் கால்வாய்த் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு தருமபுரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வாக்குறுதி அளித்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் இந்த நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த திட்டங்கள் மட்டுமல்லாது தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் உள்ளிட்ட அனைத்தும் திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, பின்பி இன்பசேகரன், டி.செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT