தமிழ்நாடு

விவசாயிகள் தற்கொலைக்குத் தயாராகி விட்டனர்:  விவசாயி வேதனை

17th Jan 2021 05:32 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் : திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் விவசாயிகள் தற்கொலைக்கு தயாராகி விட்டனர் என விவசாயி எம்.சுதர்ஸன் வேதனையுடன் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதமாக பெய்த கடும் மழையால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் பயிர்கள் அழுகியும், மழை நீரில் மூழ்கியும் உள்ளன.

இது குறித்து, கூத்தாநல்லூர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளரும், விவசாயியுமான எம்.சுதர்ஸன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,  

கூத்தாநல்லூர் நகராட்சி குட்பட்ட லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர் மற்றும் ராமனாதன் கோயில் உள்ள 3 வட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

சிறப்பான முறையில் சாகுப்படி செய்து, நன்றாக விளைந்த பயிரை அறுவடை  செய்ய இருந்த நேரத்தில் ஒன்னரை மாதமாக விடாது பெய்த மழையால், நிலம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

ஒரு பிடி கதிர் கூட அறுக்க முடியாத அளவுக்கு,   சேதம் ஏற்பட்டுள்ளது.    மாட்டுக்கு  வைக்கோல் கூட கிடைக்காத நிலையாகி விட்டது. தமிழக அரசு அவசர அவசரமாக கணக்கெடுத்தது. அதில், வேளாண் துறை சொல்லியபடி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகிறது. விவசாயிகளுக்கு  அதைத் தர வேண்டும் என மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்து இருந்தார்.

கணக் கெடுத்தப் பிறகு, ஹெக்டேருக்கு ரூ.13,500 எனவும், பிறகு, ரூ.20 ஆயிரம் எனவும் அறிவித்தார்கள். ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் போட வேண்டும். ஆனால், அறிவித்தபடி வங்கியில் முழுமையாக பணம் ஏறவில்லை. ஒருவருக்கு ரூ.4 ஆயிரம், ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் என ஏறியுள்ளன.

இந்தக் குளறுபடி அரசிடம் உள்ளதா, வேளாண் துறையிடம் உள்ளதா அல்லது கணக்கெடுத்தவர்களிடம் உள்ளதா எனத் தெரியவில்லை. சிலருக்கு பணமே ஏறவில்லை. விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணமும், பயிர் காப்பீடும் தர வேண்டும்.  

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம் அறிவிப்பின் படி, வரும் 20 ஆம் தேதி, 100 இடங்களில் சாலை மறியல் செய்யப்பட உள்ளது.

விவசாயிகளை சோதிக்காதீர்கள். தற்போது விதைகள் வாங்கக் கூட எங்களிடம் பணம் இல்லை. வாங்கியக் கடனை எப்படிக் கொடுக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை.

விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இழப்பீட்டுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள தயாராகி விட்டார்கள்.

ராமனாதன் கோயில் தெருவில் 540 ஏக்கர், லெட்சுமாங்குடியில் 500 ஏக்கர், கூத்தாநல்லூர் மற்றும் பண்டுதக்குடியில் 600 ஏக்கர் என 1,850 ஏக்கர் சேதம் அடைந்துள்ளன.

கடன் வாங்கி சாகுபடி செய்து, நிர்கதியாக உள்ளோம். பாதிக்கப்பட்ட நிலங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்ய வேண்டும். விவசாயிகளை பாதுக்காக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது என வேதனையுடன் தெரிவித்தார்.

Tags : திருவாரூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT