தமிழ்நாடு

போடி அருகே 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

17th Jan 2021 02:47 PM

ADVERTISEMENTபோடி: போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சீ.ராஜகோபால் மற்றும் குழுவினர் பழங்கால கல்வெட்டுக்கள் தொடர்பாக ஆய்வுகள் செய்து வருகின்றனர். 

போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் பழங்கால கல்வெட்டுக்கள் இருப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்த ஜெ.ஜெயகுமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சடையால்பட்டி கிராமத்தில் சென்று பார்த்தபோது கல்வெட்டு ஒன்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சீ.ராஜகோபால் கூறியது: சடையால்பட்டி கிராமத்தில் ஜெயகுமாருக்கு சொந்தமான நிலத்தில் பெரிய அளவிலான கல் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருந்தது. அதனை எடுத்து பார்த்ததில் அது பழமையான கல்வெட்டு போன்று தோன்றியது. ஒன்றரை அடி அகலமும், இரண்டரை அடி நீளமும் கொண்ட கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை படி எடுத்து ஆய்வு செய்தோம்.

ADVERTISEMENT

மதுரை தொல்லியல் நிபுணர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் எழுத்துக்களை ஆய்வு செய்ததில் இந்த எழுத்துக்கள் 800 வருடம் அதாவது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிந்தது. 

கல்வெட்டின் விளிம்புகள் இயற்கை சூழல் காரணமாக சேதமடைந்துள்ளது. ஐந்து வரிகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.  

குறிப்பிட்ட சமூகத்தினருக்கு நிலம் தானமாக கொடுத்ததற்கான வாசகங்களாக தமிழ் வரிகள் அமைந்துள்ளது. தானம் வழங்கிய இடத்தின் எல்லைகளை குறிப்பிட்டும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ஆய்வு செய்தால் இப்பகுதியில் ஆட்சியாளர்களின் ஆட்சி நெறிகளை அறியலாம் என்றார் ராஜகோபால்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT