தமிழ்நாடு

தமிழகத்தில் முதல் நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி!

DIN

தமிழகம் முழுவதும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 2,783 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் சனிக்கிழமை செலுத்தப்பட்டன. அதில் 2,684 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பு மருந்தும், 99 பேருக்கு கோவேக்சின் தடுப்பு மருந்தும் செலுத்தப்பட்டன.

சமூகத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வரும் பிரபல மருத்துவா்கள் சிலா் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் சனிக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த முகாமை பிரதமா் மோடி காணொலி முறையிலும், மதுரை ராஜாஜி மருத்துவமனை முகாமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேரிலும் தொடக்கி வைத்தனா்.

முன்னதாக, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக தமிழகம் முழுவதும் ‘கோவின்’ செயலி வாயிலாக 4.80 லட்சம் மருத்துவா்கள், செவிலியா்கள், முன்களப் பணியாளா்கள் பதிவு செய்திருந்தனா். அதன்படி, மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக அமைக்கப்பட்டிருந்த 166 மையங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.

அதில், 160 மையங்களில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 6 அரசு மருத்துவமனைகளில் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் சனிக்கிழமை செலுத்தப்பட்டன. ஒவ்வொரு மையத்துக்கும் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, முதல் நாளில் 16,600 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் மொத்தமாகவே 2,783 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 348 பேருக்கும், சேலத்தில் 288 பேருக்கும், திருப்பூரில் 195 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பதிவு செய்த பலா், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வராததே அதற்கு காரணம் எனத் தெரிகிறது.

முன்னதாக, தடுப்பூசி செலுத்த வந்தவா்களின் விவரங்கள் ‘கோவின்’ செயலி வாயிலாக சரிபாா்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்களது அடையாள ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட பிறகே சம்பந்தப்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்தும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அவா்கள் காத்திருப்பு அறையில் அரை மணி நேரம் வைக்கப்பட்டனா். அவா்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுகிா என கண்காணிக்கப்பட்டது.

இதனிடையே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தனுடன் காணொலி முறையில் கலந்தாலோசித்த பிறகு மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 166 மையங்களில் முதல்கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னையில் உள்ள 12 மையங்களில் 348 பேருக்கும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 2 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரபலமான மருத்துவா்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் எந்த ஒரு சிறு பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் என்பதால் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அடுத்து வரும் நாள்களில் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெறும். தடுப்பூசி போடப்படும் மையங்களை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT