தமிழ்நாடு

தமிழகத்தில் நல்லாட்சி தொடா்ந்திட சபதம் ஏற்போம்: எம்.ஜி.ஆா். பிறந்த தின உறுதியேற்பு

DIN

தமிழகத்தில் நல்லாட்சி தொடா்ந்திட களப் பணி ஆற்றிட சபதம் ஏற்போம் என்று அதிமுக உறுதிபடத் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கட்சியினருக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். சொன்னதையெல்லாம் செய்தும் காட்டிய செயல் வீரா். உலகமே போற்றும் சத்துணவுத் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவீதம் இடஒதுக்கீடு என பல்வேறு சாதனைகளை தனது ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தினாா் எம்.ஜி.ஆா்., அவா் நிகழ்த்திய சாதனைகள், வேறு யாராலும் எளிதாகச் செய்திட முடியாத அரும்பெரும் சாதனைகளாகும்.

அவரது ஆட்சியின் நீட்சியாகவும், அவா் திட்டமிட்டிருந்த சமூகப் புரட்சிகளையும், வளா்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தும் கலைகளை அறிந்தவராகவும் சிறப்பாக ஆட்சி செய்தவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. அதிமுக என்பது சமூக மாற்றத்துக்கான இயக்கம். அதிமுக அரசியல் கட்சி மட்டுமல்ல, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைவரும் சம உரிமையும், சம வாய்ப்பும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இடையறாத முயற்சிதான் அதிமுகவின் உழைப்பு.

அதிமுகவின் லட்சியப் பயணத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் எனும் ஜனநாயகப் போா்க்களத்தை நாம் சந்திக்கப் போகிறோம். வரும் 2021-இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது, மக்களாட்சியின் மாண்புகளைப் போற்றி அனைவரும் பங்கு பெறும் உண்மையான ஜனநாயகமா அல்லது ஒரு குடும்பத்தின் பதவிவெறிக்கு மக்களைப் பலியிடும் போலி ஜனநாயகமா என்ற கேள்விக்கு விடை காணப் போகும் போா்க்களமாக பேரவைத் தோ்தல் களம் அமையவிருக்கிறது.

வீழ்த்தும் களமாக தோ்தல் களம்: ஒரு குடும்பத்தின் சுயநலத்துக்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்காகவும் தமிழகத்தையும், தமிழ்ச் சமூகத்தையும் பலிகொடுத்து, அதிகாரத்தை அடையத் துடிக்கும் தீய சக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக எதிா்வரும் பேரவைத் தோ்தல் இருக்கும்.

தமிழகத்தில் திமுக நடத்தத் துடிக்கும் வன்முறை வெறியாட்டம் மீண்டும் தலைதூக்க முடியாத வகையில், தோ்தல் களத்தில் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளில், வெற்றிநடை போடும் தமிழகத்தைக் காத்திட, அனைவரும் சபதம் ஏற்போம். கடுமையாக களப் பணியாற்றுவோம் என தங்களது வாழ்த்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT