தமிழ்நாடு

நெல்லையில் முதற்கட்டமாக 7,550 பேருக்கு கரோனா தடுப்பூசி: மாவட்ட ஆட்சியர் தகவல்

16th Jan 2021 12:49 PM

ADVERTISEMENT


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக 7,550 பேருக்கு கரோனா தடுப்பூசிப் போடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு சனிக்கிழமை தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோன தடுப்பூசி போடும் பணி திருநெல்வேலி உயர் சிறப்பு மருத்துவமனை,  ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. 

திருநெல்வேலி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதில், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் உள்பட மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு இத்தடுப்பூசி போடப்பட்டது. 

பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கூறியது:
மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி கரோனோ நோய் பரவலை தடுக்கும் வகையில், கரோனா தடுப்பூசி திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் 2 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர் நல மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 8 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. 

ADVERTISEMENT

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக முன்களப்பணியாளார்களுக்கும், மூன்றாம் கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்கு குறைவான நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்து பொதுமக்களுக்கும் படிபடியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி உயர்சிறப்பு மருத்துவமனையிலும், ரெட்டியார்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தலா 100 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 

இத்தடுப்பூசி திட்டத்திற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 20,963 சுகாதார பணியாளர்களின் விவரங்கள் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் இப்பணிக்காக 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், முதல் நிலை அலுவலர் பயனாளியின் அடையாள அட்டையை சரிபார்த்து, இரண்டாம் நிலை அலுவலர் பயனாளிகள் குறித்த விவரங்களை கோவின் செயலியில் சரிபார்த்த பிறகு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போட்ட உடன் பயனாளிகள் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்பட்டு பக்கவிளைவுகள் ஏதுமில்லை என உறுதி செய்தபின் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு 15,100 தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. முதற்கட்டமாக 7,550 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தேவைக்கேற்ப மாநில தடுப்பு மையத்திலிருந்து தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். 

இத்தடுப்பூசியானது சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒருவர் தன்னை பாதுகாப்பதற்கும், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் இத்தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. 

ஏற்கனவே கோவிட்- 19 தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.  
இத்தடுப்பூசி ஒரு தனி நபருக்கு இரண்டு முறை போடப்படும். முதல் முறை ஊசி போட்டப்பின் 28 நாட்கள் கழித்து அதே நபருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்படும். இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டு, 2 வாரங்களுக்கு பிறகு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றார். 

இந்நிகழ்வின் போது மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், திருநெல்வேலி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Corona vaccine District Collector
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT