தமிழ்நாடு

மேற்குத் தொடர்ச்சி மலையில் 7ஆவது நாளாகத் தொடரும் கனமழை: தாமிரவருணியில் தொடர் வெள்ளப்பெருக்கு

15th Jan 2021 10:36 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 7 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் 5ஆவது நாளாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நவம்பரில் தொடங்கியது. ஆனால் பரவலாக மழை இல்லை. இந்நிலையில் ஜன. 8 ஆம் தேதி முதல் வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை இருந்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்துவருகிறது.

இதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து 7ஆவது நாளாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு 50 ஆயிரம் கன அடியைத் தாண்டியது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ADVERTISEMENT

பாபநாசம் கோயில் படித்துறையில் உள்ள மண்டபத்தின் மேல் தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட மரத்தடி தங்கியுள்ளது.

வெள்ளப்பெருக்கால் மணிமுத்தாறு, பாபநாசம், அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் மற்றும் வாழை பயிர்கள் நாசமாகின. நெல் மற்றும் வாழை பயிரிட்டுள்ள வயல்களில் தொடர்ந்து 3 நாள்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகும் நிலை உருவாகியுள்ளது. 

மேலும் செவ்வாய் கிழமை இரவு மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலை செல்லும் மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் மாஞ்சோலைக்கு போக்குவரத்துத் தடைபட்டது. தொடர்ந்து இரண்டு நாளாக வியாழக்கிழமை இரவு வரை மண் சரிவு சரி செய்யப்படாததால் 3ஆவது நாளாக போக்குவரத்துத் தடைபட்டுள்ளது. இதனால் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பால் உளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால் மீண்டும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கடந்த 8 நாள்களாக பெய்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT