தமிழ்நாடு

வனத்துறை தடை: வழக்கொழிந்து வரும் வங்காநரி ஜல்லிக்கட்டு

13th Jan 2021 12:33 PM

ADVERTISEMENT

வாழப்பாடி: வனத்துறை தடை விதித்துள்ளதால், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பொங்கல் திருநாளையொட்டி 100 ஆண்டுகளாக நடந்து வரும் வங்காநரி ஜல்லிக்கட்டு வழக்கொழிந்து வருகிறது. முன்னோர்கள் வழியில் சடங்கு சம்பிரதாயமாக தொடர்ந்து வரும் இந்த பராம்பரிய விழா தொடர்ந்து நடைபெற, வனவிலங்குச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அனுமதியளிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, ரங்கனுார், மத்துார், பெரிய கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், மார்கழி மாதத்தில் பயிர்களை அறுவடை செய்த பிறகு, தை மாதத்தில் புதிய சாகுபடி செய்வதற்கு முன்,  ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற  நம்பிக்கை தொடர்ந்து வருவதால், ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தி, பொங்கல் திருநாளை நிறைவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சின்னமநாயக்கன்பாளையத்தில் வங்காநரியை பிடித்து மக்களுக்கு காண்பிக்கும் ஊர் பிரமுகர்கள் (கோப்பு படம்)

வங்காநரி வனவிலங்குப் பட்டியலில் உள்ளதால், இந்த நரியைப் பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்தது. தடைமீறியை வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால், கடந்த இரு ஆண்டாக வனத்துறை அபராதம் விதித்து வந்தது. இந்நிலையில், நிகழாண்டு வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுமென வனத்துறை கடுமையாக எச்சரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், வாழப்பாடி பகுதி கிராமங்களில் நூறு ஆண்டுகளாக முன்னோர்கள் வழியாக தொடர்ந்து நடந்து வரும் வங்காநரி ஜல்லிக்கட்டு வழக்கொழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனுார் மற்றும் கொட்டவாடி கிராம மக்கள் சிலர் கூறியதாவது:

ADVERTISEMENT

வங்காநரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் விலங்கு அல்ல. கிராமப்புற தரிசு நிலங்களிலும், சிறு கரடுகள், நீர்நிலையொட்டிய புதர்களிலும் வாழும் சிறு விலங்கு. இந்த வங்காநரியை பிடித்து எவ்விதத்திலும் துன்புறுத்தாமல், கோவில் மைதானத்தில் கூடியிருக்கும் மக்களின் முகத்தில் காண்பித்து விட்டு, அதன் வாழிடத்திலேயே விட்டு விடுவோம். பொங்கல் திருநாள் தோறும் வங்காநரியை பிடித்து வந்து மக்களுக்கு காண்பித்த பிறகு, உள்ளூர் தரிசு நிலங்கள், வனப்பகுதியில் விடுவதால், வாழப்பாடி பகுதி கிராமங்களில் வங்காநரிகளின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. எனவே, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், எங்களது கோரிக்கையை ஏற்று நூறு ஆண்டுகளாக சடங்கு சம்பிரதாயமாக தொடர்ந்து வரும் இந்த பராம்பரிய விழா தொடர்ந்து நடைபெற, வனவிலங்குச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அனுமதியளிக்க வேண்டும். அபராதம் விதிப்பதையும் வழக்குப் பதிவு செய்வதையும் கைவிட வேண்டும்’ என்றனர்.

 

Tags : jallikattu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT