தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

9th Jan 2021 02:59 PM

ADVERTISEMENT


பெரம்பலூர்: விவசாயிகள்  குறைதீர் கூட்டம், மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆகியவற்றை வழக்கம்போல் நடத்த வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 40 ஆண்டுகளாக மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், மின் வாரிய நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், முன்னாள் படை வீரர்கள் கூட்டம், ஓய்வு பெற்ற அலுவலர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் மூலம் நடத்தப்பட்ட குறைதீர் கூட்டம் முறையாக நடைபெறவில்லை. 

எனவே, இக்கூட்டங்களை ஏற்கனவே நடத்தப்பட்டதை போல அரசு விதிமுறைகளின்படி நேர்காணல் கூட்டங்களாக நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு துணியால் கண்,  காதுகளை கட்டிக்கொண்டு, கைகளால் வாயை மூடிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT