தமிழ்நாடு

கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தேடப்பட்ட இரு குற்றவாளிகள் கைது 

7th Jan 2021 05:49 PM

ADVERTISEMENT


நன்னிலம்: கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தேடப்பட்டு, நீதிமன்றத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட தலைமறைவான, கொலைக் குற்றவாளிகள் இருவரைப் புதன்கிழமை, நன்னிலம் காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர். 

 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் வண்டாம்பாளையில் பல்லு செந்தில் என்பவரை 2008ஆம் ஆண்டு, வெட்டிப் படுகொலைச் செய்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு குற்றவாளிகளையும் கண்டுபிடித்திட, திருவாரூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்,  நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் தலைமைக் காவலர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்துத் தேடுவதற்கு உத்தரவிட்டார். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் இருவர் தலைமறைவாகி விட்ட காரணத்தினால், காவல்துறையால் தேடப்பட்டு, நீதிமன்றத்தால் தலைமறைவானக் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்த தலைமறைவான, நீதிமன்றத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட இரண்டு நபர்களையும், நன்னிலம் காவல்துறை ஆய்வாளர் சுகுனாத் தலைமையிலான காவல்துறையினர், நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு, தலைமறைவான இரண்டு குற்றவாளிகளான, சென்னை ஓஎம்ஆர் சாலை கண்ணகி நகரைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் மூர்த்தி வயது 48, சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மதுசூதனன் (வயது 42) ஆகிய இருவரும், தங்கள் தோற்றத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வேளச்சேரி பகுதியில், மாநாகராட்சி ஒப்பந்தத் துப்பரவு பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சென்னைக்குச் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்து,  வியாழக்கிழமை, நன்னிலம் நீதிமன்ற நடுவர் பொறுப்பிலுள்ள வலங்கைமான் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்தி, ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை ரிமாண்ட் பெற்று, இருவரையும் நன்னிலம் கிளைச் சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். 

பல ஆண்டுகளாக கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுத் தலைமறைவாகி, நீதிமன்றத்தால் தேடப்படும் தலைமறைவான குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவரையும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்  கைது செய்த நன்னிலம் காவல்துறையினரை, நன்னிலம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுகுமாரன் மற்றும் திருவாரூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT