தமிழ்நாடு

80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்கும் முறை: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

7th Jan 2021 03:33 PM

ADVERTISEMENT

 

சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை எதிர்த்த வழக்குகளில் இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க வகை செய்யப்படுகிறது. தேர்தல் பணியில் இருக்கும் அரசு பணியாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுவதால் அதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. 

வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளரிடம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த முறையை திரும்ப பெற வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்க அனுமதி வழங்குவதற்கு பதிலாக மூத்த குடிமக்களுக்கென்று தனி வாக்குச்சாவடி அமைக்கக் கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனு இதுவரை பரிசீலிக்கவில்லை.

ADVERTISEMENT

எனவே 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இதே போல் மாற்றுத்திறனாளிகள் சங்கம், முதியவர் துரை ஆகியோர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முதியவர் துரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விடுதலை, சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது

மாற்றுத் திறனாளிகள் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிட்டார். திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன்,  இந்த புதிய நடைமுறை காரணமாக ரகசியமாக வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும். இதன் மூலம் 30 சதவீதம் பேர் தபால் வாக்குகளை பதிவு செய்யக் கூடும்.மேலும், தேர்தல் அறிவிப்பு வெளியானால் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பு கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டனர். இந்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT