சென்னை: திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதியளித்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபாலபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பிரபு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதியளித்து கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதியளித்து கடந்த ஜனவரி 4-ஆம் தேதி தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீட்டித்து கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார, விளையாட்டு, மதம் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து வகையான கூட்டங்களிலும், 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அதிகபட்சமாக 200 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திரையரங்குகளில் நூறு சதவீத இடங்களையும் அனுமதித்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. மேலும், இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் இன்னும் தொடங்காத நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். உத்தரவை ரத்து செய்து, தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தொடர உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.