ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து தொடங்கி வைக்கின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில் ஜனவரி 15 முதல் 31-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
அவற்றில் உலக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்து அதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 14-இல் அவனியாபுரம், ஜனவரி 15-இல் பாலமேடு, ஜனவரி 16-இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அரசு அனுமதி
மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். இத்தகவலை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.