பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யக் கோரி ஜன.10-ல் திமுக மகளிரணி சார்பில் பொள்ளச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்பட பல இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி, விடியோ எடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் 2019 பிப்ரவரியில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் பொள்ளாச்சியைச் சோ்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமாா், வசந்தகுமாா், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தனா். 2019 மாா்ச் முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதனிடையே வழக்கில் கைதான 5 பேரின் கூட்டாளிகளான பொள்ளாச்சி, வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அருளானந்தம் (34), பழனிசாமி மகன் பாபு (எ) பைக் பாபு (27), ஆச்சிப்பட்டி, அ.சங்கம்பாளையம், கற்பக விநாயகா் நகரைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஹேரேன்பால் (29) ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்து கோவை அழைத்து வந்தனா். இதில் கைதான அருளானந்தம் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளராகப் பதவி விகித்து வந்தாா்.
இந்த நிலையில் பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யக் கோரி ஜன.10-ல் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக மகளிரணி சார்பில் பொள்ளச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.