ஈரோடு: ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேரடி விவாதத்துக்கு ஸ்டாலின் தயாரா என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பவானி, கள்ளிப்பட்டி மற்றும் அந்தியூரில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்திவருகிறார். மக்களவைத் தேர்தலின்போதும் இதேபோன்ற கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினார்.
மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்தக் கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார்.
திமுகவினருக்கு ஏப்ரலுக்குள் தண்டனை: முதல்வரும், அமைச்சர்களும் ஊழல் செய்துவிட்டதாக ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் கொடுத்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் டெண்டரே விடப்படாத திட்டத்தில் ஊழல் நடந்ததாகப் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தொடங்காத ஒரு பணியில் எப்படி ஊழல் செய்ய முடியும்?
திமுக முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மீது 9 வழக்குகள், பொன்முடி மீது 3 வழக்குகள், கே.என்.நேரு மீது 2 வழக்குகள், துரைமுருகன் மீது 2, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது 2, சுப. தங்கவேலன், அன்பரசன், சுரேஷ்ராஜன் மீது ஒரு வழக்கு என திமுக பிரமுகர்கள் மீது நீதிமன்றத்தில் 30 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொண்டு தப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்குகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் விசாரித்து முடித்துவிடுவார்கள். இனி வாய்தா வாங்க வழியில்லை என்பதால், ஏப்ரல் மாதத்துக்குள் இந்த வழக்குகளில் அவர்கள் தண்டனை பெற்று விடுவார்கள்.
எங்களது அரசில் எல்லாப் பணிகளும் இ-டெண்டர் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் இ-டெண்டரில் விண்ணப்பிக்கலாம். ஆனால், திமுக ஆட்சியில் யார் டெண்டர் பெற வேண்டுமென நினைக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் டெண்டர் விண்ணப்பப் படிவமே கொடுப்பார்கள். அப்போதுதான் ஊழல் நடந்தது.
2 ஜி அலைக்கற்றை ஊழல்: என் மீது சிபிஐ விசாரணை வேண்டுமென ஸ்டாலின் கேட்கிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திமுக அதில் அங்கம் வகித்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா 2 ஜி அலைக்கற்றையை ஏலம் விட்டார். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று வேடிக்கையான முறையில் டெண்டர் விடுத்தார். இதன் மூலம் ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இது பற்றி ஸ்டாலின் வாய் திறப்பதில்லை.
தேசிய அளவில் விருதுகள்: எங்களது சிறப்பான செயல்பாட்டால், தேசிய அளவில் பல்வேறு விருதுகளைத் தமிழகம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மின்வெட்டு முழுமையாகக் குறைந்து, மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது.
திமுக ஆட்சியில் ஏழை, உழைக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இது மக்களின் அரசு. சிறு மருத்துவமனை (மினி கிளினிக்) என்பது நாடகம், மருத்துவர், செவிலியர் இல்லை என்று ஸ்டாலின் சொல்கிறார்.
தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் 2,000 சிறு மருத்துவமனைகளில் உரிய மருத்துவர்களை நியமிக்க துறைச் செயலாளர் உத்தரவிட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
திமுக என்றால் அராஜக, அடாவடிக் கட்சி. ஆனால் அதிமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் - ஒழுங்கைப் பேணிக் காப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி நாங்கள் தேசிய அளவில் விருதுகளைப் பெற்று வருகிறோம். திமுக ஆட்சியில் என்ன விருது பெற்றார்கள்?
அதிமுக ஆட்சியில் எங்கு ஊழல் நடந்தது? நாங்கள் பேசத் தயார். நான் இப்போது ஸ்டாலினை அழைக்கிறேன். எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் ஸ்டாலின் வரலாம். நான் சவால் விடுகிறேன். துண்டுச்சீட்டு இல்லாமல் எந்த இடத்துக்கு ஸ்டாலின் அழைத்தாலும் நான் வருகிறேன். எதில் என்ன ஊழல் என்று கேட்டால், நான் பகிரங்கமாக பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?
சகோதரருக்கே துரோகம் செய்தவர்: அதிமுக உடையும் என்று ஸ்டாலின் கூறுகிறார். முதலில் அவர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்.
ஸ்டாலின் தன்னை ஏமாற்றி விட்டார் என மதுரையில் இருந்து ஒருவர் புறப்பட்டு விட்டார். சகோதரருக்கே துரோகம் செய்தவர் மக்களைக் காப்பாற்றுவாரா என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.