தமிழ்நாடு

'பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும்'

7th Jan 2021 05:28 PM

ADVERTISEMENT

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஆளும் அதிமுக கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஆளும் கட்சியினருக்கு நேரடியாக தொடர்புள்ளது என பலரும் முன்வைத்த  குற்றச்சாட்டு உண்மை எனவும் நிரூபணமாகியுள்ளதோடு, இவ்வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலர் கைது செய்யப்படாமல் உள்ளார்கள் எனவும் தெரிய வருகிறது.

இவ்வழக்கு விசாரணையை ஏற்றுக் கொண்ட சிபிஐ 16 மாதங்களுக்கு பிறகே இவர்களை கைது செய்துள்ளது. இவ்வளவு தாமதம் அரசியல் தலையீட்டின் காரணமாக இருக்குமோ என்கிற ஐயமும் பொதுமக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

எனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், இவ்வழக்கின் விசாரணை அரசியல் தலையீடின்றி நேர்மையாக நடைபெற வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமெனவும் இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அமைப்பையும், காவல்துறை அதிகாரிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

மேலும் இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனையை உறுதி செய்யும் பொருட்டே, காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT