தமிழ்நாடு

வாழப்பாடி பகுதியில் நெல் அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

6th Jan 2021 12:59 PM

ADVERTISEMENT


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தற்போது அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், கருமந்துறை, தும்பல், அயோத்தியாபட்டணம்,  குப்பனுார், கூட்டாத்துப்பட்டி,உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் அளவிற்கு போதிய பொழிவு இல்லை. இதனால் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடந்ததால், நன்செய் நிலங்களிலும் அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் நெல், வாழை, கரும்பு ஆகியவற்றை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டது. மழையை நம்பி மானாவாரியாக விளையும் புன்செய் பயிர்களை  மட்டுமே விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாவே இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வறண்டு கிடந்த விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளிலும் நீர்செறிவு ஏற்பட்டது.

ADVERTISEMENT

காரிப்பட்டி அருகே அறுவடை செய்த நெல்லை உலர்த்தி தரம் பிரித்து மூட்டை பிடிக்கும் விவசாய குடும்பத்தினர்.

இதனையடுத்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பாலான நன்செய் விவசாயிகள், கிணற்றுப் பாசன முறையில், மிகுந்த ஆர்வத்தோடு நெல் பயிரிட்டனர். இதனால், இப்பகுதியில் 3 ஆண்டுக்கு பிறகு நெல் சாகுபடி பரப்பளவு மும்மடங்கு அதிகரித்தது.

3 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் முற்றி, தற்போது அறுவடைக்கு தயாரானதால், நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முராக ஈடுபட்டுள்ளனர். 

விவசாய கூலித்தொழிலாளர்களை கொண்டு பாரம்பரிய முறையிலும், நவீன நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தியும், நெல் அறுவடை செய்யும் பெரும்பாலான விவசாயிகள், நெல்லை விற்பனை செய்யாமல் , உலர்த்தி தரம் பிரித்து,  உணவு மற்றும் விதை  தேவைக்காக சேமித்து வைத்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்து  இடையப்பட்டி விவசாயி மகாலட்சுமி கூறியதாவது:
3 ஆண்டுக்கு பிறகு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்றில் தண்ணீர் ஊறியதால் நெல் பயிரிட்டோம். மூன்று மாதத்திற்கு பிறகு நெல் அறுவடை செய்துள்ளோம். இந்த நெல்லை விற்பனை செய்யாமல் உலர்த்தி தரம் பிரித்து உணவு மற்றும் விதை தேவைக்காக வீட்டிலேயே இருப்பு வைத்துக் கொண்டோம்‘ என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT