தமிழ்நாடு

வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மறியல் முயற்சி: சிஐடியுவினர்-காவலர்களிடையே தள்ளுமுள்ளு

6th Jan 2021 02:56 PM

ADVERTISEMENT

 

அவிநாசி: வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் தொழிளார்கள் திருத்த சட்டங்கள், வேளாண் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்டவை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் குமரன் நினைவகம் முன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். 

இதையறிந்து அப்பகுதியில் முன் கூட்டியே ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், 70க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சிஐடியுவினர் குமரன் நினைவகம் முன் ஒன்று திரண்டனர். பிறகு முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும், காரோனா கால பாதிப்பில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கூறி கோஷமிட்டனர். 

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபடவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் தடுப்பரண்கள் ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினர். இதனால் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியுவினர், காவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ள ஏற்பட்டது. 

இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 70 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்தனர். இதனால் திருப்பூர் ரயில் நிலையம் முன் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகி, பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT