தமிழ்நாடு

பொன்மலை ரயில்வே பணிமனையில் மே நாள் விடுமுறை இல்லை: வைகோ கண்டனம்

4th Jan 2021 03:37 PM

ADVERTISEMENT

 

பொன்மலை ரயில்வே பணிமனையில் மே நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகம் முழுவதும் மே முதல் நாள், தொழிலாளர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 இல் முதல்வர் பொறுப்பு ஏற்றபோது, தொழிலாளர் உரிமைத் திருநாளான மே 1 ஆம் தேதி, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துப் பெருமை சேர்த்தார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பு ஏற்ற கலைஞர் அவர்கள் மே நாள் விடுமுறை தொடர்வதற்கு உத்தரவிட்டார்.

1990 ஆம் ஆண்டு மே நாளின் நூறாவது ஆண்டு விழாவை, உலகம் முழுமையும், தொழிலாளர்கள் வெகு உற்சாகத்தோடு கொண்டாட ஏற்பாடுகள் செய்தபோது, அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் முன்னிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் பேசும்போது, இந்தியா முழுமையும் மே நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரினேன்.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா, ஜனதா தளத்தைச் சேர்ந்த கமல் மொரார்கா ஆகியோர் ஆதரித்துப் பேசினார்கள். உடனே பிரதமர் வி.பி.சிங், இந்திய அரசு, மே நாளுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கும். 1990, மே முதல் நாள் நடைமுறைக்கு வருகின்றது என்று அறிவித்தார்.

தற்போதைய பா.ஜ.க. அரசு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றது. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, 44 சட்டங்களை 4 தொகுதிகளாக மாற்றுவதற்கு முனைந்து வருகின்றது.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேரம் வேலை என்பதை பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மாநிலங்களில் 12 மணி நேரமாக அதிகரித்து, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதே ஏதேச்சதிகார முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசும் ஈடுபட்டுள்ளது.

இரயில்வே துறையில் தொழிலாளர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில், இது வரையில் மே நாளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறையை இரத்து செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இதனை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2021 விடுமுறை நாள் பட்டியலில் மே நாளுக்கு பொது விடுமுறை நாள் உண்டு என, பொன்மலை இரயில்வே பணிமனை நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
 

Tags : vaiko may day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT