திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றியங்களில் தலா ஒரு மினி கிளினிக் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
துறையூர் தொகுதிக்குள் முதல்கட்டமாக துறையூர் ஒன்றியத்தில் விசாலாட்சியம்மாள் சமுத்திரம் ஊராட்சியிலும், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தளுகை ஊராட்சிக்குள்பட்ட த.பாதர்பேட்டை கிராமத்திலும் மினி கிளினிக்குகள் தொடக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான மு.பரஞ்சோதி மினி கிளினிக்குகளை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் தொடக்கி வைத்து அதிமுக அரசின் சாதனைகள் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
நிகழ்ச்சியில் துறையூர் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, துறையூர் வடக்கு ஒன்றிய செயலர் சேனை செயலர், வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் ஏ. அன்புபிரபாகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் விசாலாட்சியம்மாள் சமுத்திரம் ஊராட்சி தலைவர்கள் வசந்தாதேவி(வி.ஏ.சமுத்திரம்), கலைசெல்வி(தளுகை), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரண்யா ஜெய்சங்கர், அத்தியப்பன், முத்துக்குமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் பி.செந்தில்குமார்(துறையூர்), மணிமேகலை(உப்பிலியபுரம்) உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.
மினிகிளினிக் மருத்துவர்கள் ஜி. முத்துக்குமார்(வி.ஏ.சமுத்திரம்), செல்தில்குமார்(தளுகை) ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு தருகிற அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் வி.ஏ.சமுத்திரத்தில் 10 பேருக்கும், தளுகையில் 12 பேருக்கும் வழங்கப்பட்டது.