திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே விவசாயி பெற்ற பயிர் கடனுக்காக அவரது மகனின் நகையை ஏலம் விடுவதாக அறிவித்த கனரா வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் சார்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குண்டடம் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் கனரா வங்கி கிளையில் பொன்னுசாமி என்ற விவசாயி தனது சொத்து பத்திரத்தை அடைமானம் வைத்து ரூ.5 லட்சம் பயிர்க் கடன் பெற்றிருந்தார் அதே வங்கியில் அவரது மகன் நல்லுசாமி நகையை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், நல்லசாமி தனது நகையை மீட்க வங்கிக்குச் சென்றபோது அவரது தந்தையின் கடனை செலுத்தினால் மட்டுமே நகையைத் திருப்பிக்கொள்ள முடியும் என்றும், இல்லாவிட்டால் வரும் ஜனவரி 12 ஆம் தேதி நகை ஏலத்தில் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கனரா வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இதன்படி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை வங்கியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாராபுரம் வட்டாட்சியர் ராமலி்ங்கம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நல்லசாமி வங்கியில் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்தினால் நகையைத் தருவதாக உறுதியளித்தனர்.
மேலும், அவரது தந்தை வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்து அசல் தொகையைச் செலுத்தி பத்திரத்தை மீட்டுக் கொள்ளலாம் என்று வங்கி அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளனர். இதன் பேரில் போராட்டத்தைக் கைவிடுவதாகக் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.