தமிழ்நாடு

கந்துவட்டி செயலிகளின் பின்னணி பற்றி விசாரணை வேண்டும்: ராமதாஸ்

3rd Jan 2021 09:05 PM

ADVERTISEMENT

கந்துவட்டி செயலிகளின் பின்னணி பற்றி விசாரணை வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்த ஆன்லைன் செயலி கந்து வட்டி நிறுவனங்களை நடத்திய சீனர்கள் இருவர் உள்ளிட்ட 4 பேரை சென்னை காவல்துறை கைது செய்திருக்கிறது. ஆன்லைன் செயலி கந்து வட்டி நிறுவனங்களின் பின்னணி தொடர்பாக வெளியாகியுள்ள முதல்கட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாகவும், அச்சமூட்டுபவையாகவும் உள்ளன. 
பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், கென்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இத்தகைய கந்துவட்டி செயலிகள் குறித்து புகார் எழுந்ததையடுத்து அவை தடை செய்யப்பட்டன. அவற்றை நடத்தி வந்த சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் இன்று வரை கந்து வட்டி செயலிகள் தடை செய்யப்படாதது ஏன்? எனத் தெரியவில்லை.
டிஜிட்டல் கந்துவட்டி நிறுவனங்கள் தனிநபர்களைத் தற்கொலைக்கு தூண்டுவதுடன் மட்டும் பிரச்சினை நின்றுவிடுவதில்லை. கந்துவட்டி செயலிகள் மூலம் தனிநபர்கள் குறித்த அனைத்து தகவல்களும் திருடப்படுகின்றன. இது ஒரு கட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையலாம். இதே காரணத்தைக் கூறி தான் 267 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருக்கிறது. இத்தகைய சூழலில் அவற்றை விட மோசமான கந்துவட்டி செயலிகளை அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இந்தியாவில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்; கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக டிஜிட்டல் கந்துவட்டி நிறுவனங்களின் பின்னணி, நோக்கம், அவற்றுக்கு துணையாக இருப்பவர்கள் குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
 

Tags : Ramadoss
ADVERTISEMENT
ADVERTISEMENT