தமிழ்நாடு

100 நாள் வேலை திட்ட பணி நாள்கள் 150 நாள்களாக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

3rd Jan 2021 01:25 PM

ADVERTISEMENT


ஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்ட பணி நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும், அன்றைய கூலியை அன்றே வழங்கவும் நடவடிக்கையெடுக்கப்படும் என திமுக தலைவர் ‌மு.க.ஸ்டாலின்‌ தெரிவித்தார்.

திமுக சார்பில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: 

அதிமுக ஆட்சியில் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. இதனால் தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் மாநிலம் முழுவதும் 12,000-த்திற்கும் மேற்பட்ட கிராம‌ சபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தோம். மக்களின்‌ கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தோம். மேலும் முடிந்தவரை நேரடியாக ஆட்சியர்கள் மற்ற அதிகாரிகளை சந்தித்து பிரச்னைகளை தீர்க்க முயன்றோம்‌.  

நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரத்தையும் தாண்டி திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். கடந்த தேர்தலில் 1.1 சதவித வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. அவர் மருத்துவமனையில் இறந்த காரணத்தால் சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.

திமுக ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டது. சொத்தில் மகளிருக்கு சமபங்கு சட்டம் இயற்றப்பட்டது போன்று பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.

தில்லியில் 38 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. மாநில அதிமுக அரசும் கண்முடித்தனமாக ஆதரவு தெரிவிக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய முழுநேர மருத்துவர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் இல்லாத நிலையில் மினி கிளினிக் தொடங்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த திட்டம் மக்களை ஏமாற்றும் திட்டம்.

திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் திமுக மட்டுமில்லாமல் அனைத்து கட்சியினருக்கும் தேவையான உதவிகளை வழங்கினோம். ஆட்சியில் இல்லாத நேரத்திலேயே மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்தது திமுக.

இந்தப் பகுதியில் வாழும் நெசவாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். திமுக ஆட்சியில் நூலை பதுக்கி வைத்து விலையை ஏற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட பணி நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும்,  அன்றைய கூலியை அன்றே வழங்கவும் திமுக பரிசீலித்து வருகிறது.

மாணவர்களின் கல்விக்கடன் திமுக ஆட்சியில் முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும் முதியோர்க்கு வழங்கப்படும் உதவித்தொகையை தற்போது முறையாக அனைவருக்கும் வழங்காமல் கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வரும் திமுக ஆட்சியில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார்.

முன்னதாக அவர், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, துணைச்செயலாளர் ஆ.செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT