கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒன்றிய தலைவர் அண்ணாதுரை வரவேற்றார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.முருகன், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் கே. மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க கோரிக்கையை ஏற்று, 2020 டிசம்பர் 5ஆம் தேதி, ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழப்பாடி ஒன்றியத்திற்ககு தலைவராக அண்ணாதுரை, செயலாளராக அலெக்ஸ் பிரபாகரன், பொருளாளராக குமரேசன், துணைத் தலைவராக பூச்சான், துணை செயலாளராக கோவிந்தராஜ், செய்தித் தொடர்பாளராக பெருமாள், துணைசெயலாளராக செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர்களாக சரவணன், கஸ்தூரி, மகளிரணி தலைவியாக உமா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிறைவாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.