புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.50 இலட்சமாகக் குறைந்துள்ளது (2,50,183). இது மொத்த பாதிப்பில் 2.43 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 19,079 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 22,926 பேர் புதிதாக குணமடைந்தனர். இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரில் 62 சதவீதத்தினர் கேரளம், மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சர்வதேச அளவில் ஒப்பிடும் போது கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் 10 இலட்சம் மக்கள் தொகையில் தொற்றுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு (101). பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடந்த 7 நாட்களில், 10 இலட்சம் மக்கள் தொகையில் தொற்றுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99 இலட்சத்தைக் கடந்து (99,06,387), ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குணமடைந்தோரின் வீதம் 96.12 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 96,56,204 ஆக பதிவாகியுள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 78.64 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளத்தில் 5111 பேரும், மகாராஷ்டிரத்தில் 4279 பேரும், மேற்கு வங்கத்தில் 1496 பேரும் குணமடைந்துள்ளனர்.
80.56 சதவீத புதிய தொற்றுக்கள் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. கேரளத்தில் 4991 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 3524 பேரும், மேற்கு வங்கத்தில் 1153 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 75.45 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரத்தில் 59 பேரும், மேற்கு வங்கத்தில் 26 பேரும், கேரளத்தில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.