தமிழ்நாடு

விவசாயிகளை காப்பாற்றுபவர் யார்? எடையில் தில்லுமுல்லு செய்த வியாபாரியை லாரியுடன் சிறைபிடித்த விவசாயிகள்

2nd Jan 2021 11:28 AM

ADVERTISEMENT

 

துறையூர்: துறையூர் அருகே மக்காச்சோளம் கொள்முதல் செய்த வியாபாரி எடையில் தில்லு முல்லு செய்ததைக் கண்டுபிடித்த விவசாயிகள் லாரிகளையும் அந்த நபரையும் வெள்ளிக்கிழமை இரவு சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சோபனபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் விளைவிக்கப்பட்ட மக்காச்சோளத்தை மொத்த விற்பனை செய்வதற்காக ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் அருகேயும், ஊருக்கு வெளியேயும் உள்ள இரண்டு களங்களில் தனித்தனியாக குவித்து வைத்து காய வைத்திருந்தனர். நல்ல காய்ந்த மக்காச்சோளம் நல்ல விலை பெறும் என்று கூறப்படுகிறது.

செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்கிற வியாபாரி மக்காச்சோளத்தில் உள்ள ஈரத்தன்மைக்கேற்ப இங்குள்ள விவசாயிகளிடம் விலை கொடுத்து பெற்றுச் செல்வதாகவும், நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாக அவைகளை கூடுதல் விலைக்கு விற்று லாபம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.1) இரண்டு லாரிகள், மின் எடைக்கருவி மற்றும் எடைபோட , லாரியில் சுமை ஏற்ற தேவையான பணியாளர்களுடன் வியாபாரி சரவணன் சோபனபுரம் சென்றார். அங்கு களத்தில் இருந்த மக்காச்சோளத்தை தான் கொண்டு சென்ற எடைக் கருவியில் ஒரு மூட்டைக்கு 100 கிலோ என்று நிறுத்தி மூட்டையாகக் கட்டி ஒரு லாரியில் 30 டன்னும், மற்றொரு லாரியில் பாதி அளவும் மக்காச்சோளம் சுமை ஏற்றினார்.

லாரியில் ஏற்றப்படும் மூட்டையின் அளவும், கனமும் கூடுதலாக இருப்பதாக ஆரம்பத்திலிருந்து விவசாயிகள் சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்து சரவணனிடம் கேட்ட போது, அதெல்லாம் வித்தியாசமில்லை. பார்வைக்கு அப்படி தெரிவதாக கூறி சமாளித்துள்ளார். ஒரு கட்டத்தில் சந்தேகம் அதிகமானதால் விவசாயிகள் தங்கள் ஊரிலிருந்து ஒரு எடைக் கருவியைக் எடுத்துச் சென்று எடை போட்ட போது ஒரு மக்காச்சோளம் மூட்டை 120 கிலோவாகவும், அதே மூட்டை சரவணன் கொண்டு சென்ற எடைக் கருவியில் 100 கிலோவாகவும் காட்டியதாம். அதேப் போல் லாரியில் ஏற்றப்பட்ட மூட்டைகளில் சிலவற்றை அளவிட்ட போதும் 20 கிலோ வித்தியாசம் காட்டியதாக  கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து எடை வித்தியாசம் குறித்து நியாயம் கேட்ட விவசாயிகளுக்கும், வியாபாரி சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடும் தகராறும் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியைடந்த விவசாயிகள் லாரியையும், சரவணனையும் சிறைப் பிடித்தனர். 

இந்த தகவல் அந்த ஊரில் பரவியதால் கடந்த வாரங்களில் அவரிடம் விற்பனை செய்த மற்ற வியாபாரிகளும் சூழ்ந்து கொண்டு தங்களை ஏமாற்றி மோசடி செய்திருப்பதாகக் கூறி இழப்பீடு கேட்டனர்.

தகவலறிந்து உப்பிலியபுரம் காவலர்கள் நேரில் சென்று பேசியும் விவசாயிகள் லாரிகளையும், வியாபாரி சரவணனையும் விடுவிக்கவில்லை. 

இந்த நிலையில் சனிக்கிழமை விடியற்காலை இயற்கை உபாதை தீர்ப்பதாகக் கூறிச் சென்ற சரவணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வியாபாரி தப்பியோடியதால் அதிர்ச்சியான விவசாயிகள் லாரிகளை தொடர்ந்து சிறைப் பிடித்து வைத்துள்ளனர்.

இரவில் சிறைபிடிக்கப்பட்ட வியாபாரி சரவணன்

ஆயினும் வியாபாரி சரவணன் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல் துறையினர் உதவியுடன் லாரியை மீட்டுச் சென்று விட்டால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை யாரிடம் பெறுவது என்று அவரிடம் ஏற்கனவே மக்காச்சோளத்தை விற்ற விவசாயிகள் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.

இது வரை அவர் கொள்முதல் செய்த மக்காச்சோளத்தின் அளவைக் கொண்டு கணக்கிட்டால் அவருடைய போலி எடை கருவி மூலம் சுமார் 30 டன் அளவு மக்காச்சோளத்தை விலைக் கொடுக்காமல் ஏமாற்றி எடுத்துச் சென்றிருப்பதாக தெரிகிறது.

நீர் வறட்சி, பூச்சி, பயிர்களைத் தாக்கும் நோய் ஆகியவற்றிலிருந்து பயிர்களைக் காப்பாற்றும் விவசாயிகளிடம் மோசடி செய்யும் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை யார் காப்பாற்றுவார் எனத் தெரியவில்லை.

மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு சரவணனிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தரவேண்டுமென்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags : Farmers capture
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT