தமிழகத்தில் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் தோல்வியைச் சந்திக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட பாஜக இளைஞரணி, மகளிரணி, கல்வியாளர் அணி, பிற்பட்டோர் அணி உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்கள், பிரதிநிதிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட பாஜக தலைவர் எல்.அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநிலச் செயலர் அ.பாஸ்கர், மாநில பொதுச் செயலர் கே.டி.ராகவன் ஆகியோர் பேசினர்.
இக்கூட்டத்தில், பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியது:
தமிழகத்தில் பாஜக தவிர்க்க இயலாத சக்தியாக விளங்கி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்து பாஜக வேல் யாத்திரை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த யாத்திரை அவசியமானது மட்டுமல்ல, அத்தியாவசியமானது. தமிழ்க் கடவும் முருகனைப் போற்றுகின்ற கந்தசஷ்டி கவசத்தை ஒரு கூட்டம் அவமதித்தது. அதனை வெற்றிவேல் யாத்திரை முறியடித்தது. இந்த யாத்திரையைக் கண்டு எதிர்க்கட்சிகள் அச்சமடைந்தன.
வேளாண் பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த கோரிக்கை 2016-இல் திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. இதை பாஜக தற்போது வேளாண் சட்டங்களாக நிறைவேற்றியுள்ளது. ஆனால், இதனை வரவேற்காமல் திமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்க்கின்றன. தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இவர்கள் போராட்டத்துக்கு வரவேற்பில்லை. மாறாகப் போராட்டத்தைப் புறக்கணித்தனர். இதேபோல, தமிழகத்தில் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தோல்வியை வழங்குவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியைச் சந்திப்பார். பட்டியலின மாணவர்கள் கல்வி உதவித்தொகைத் திட்டம், வேளாண் சட்டங்கள் என அனைத்துத் திட்டங்களிலும் திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன், தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிகழ்ந்து வந்தது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன், தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இலவச எரிவாயுத் திட்டம், காப்பீடுத் திட்டம், விவசாயிகள் உதவித் தொகை வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் மத்திய அரசின் திட்டத்தால் நேரடியாகப் பயன்பெற்றுள்ளனர். வருங்காலத்தில் அரசியலை பாஜக தீர்மானிக்கும். தேர்தலில் பாஜக உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்து பேரவைக்கு அனுப்புவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர், பதவியை ஏற்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஆகவே கட்சித் தொண்டர்கள் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.