தமிழ்நாடு

நெல்லையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

2nd Jan 2021 03:07 PM

ADVERTISEMENT

 

கரோனா தடுப்பூசி ஒத்திகை திருநெல்வேலியில் மூன்று இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பூசி திட்டத்திற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான சவால்களைக் கண்டறியும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் காணொலி காட்சி வழியாக முன்னதாக வழிகாட்டும் நெறிமுறைகள் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் மையங்களுக்கு தெரிவிக்கப்பட்டன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம் நகர்நல மையம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில்  தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்த மூன்று மையங்களிலும் தலா 25 பேர் என மொத்தம் 75 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.  இந்த ஒத்திகையின்போது, போதுமான காற்றோட்டமான இடவசதி, இணைய இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளும் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ADVERTISEMENT

தடுப்பூசி மையத்திற்கு ஒத்திகைக்கு வந்த முன்கள பணியாளர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்களின் அடையாள அட்டை மூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ஐந்து, ஐந்து பேராக உள்ளே அனுப்பப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கணினியில் பதிவு செய்யப்பட்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. பின்னர், கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. பின்னர் அவர்கள் கண்காணிப்பு அறையில் 30 நிமிடங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வுக்கு சமுதாய மருத்துவ பேராசிரியர் மருத்துவர் சுமதி தலைமை வகித்தார். 

இதுகுறித்து அவர் கூறியது:

இந்த தடுப்பூசி ஒத்திகை பணியில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தடுப்பூசி திட்டப் பணி ஒத்திகைக்குத் தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு நாள் முன்னதாக செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. கோவின் செயலியில் இந்த ஒத்திகையில் பங்கேற்போர் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவர்களின் கைப்பேசிக்கு இந்த செயலி மூலம் குறுந்தகவல் சென்றடையும். மேலும், அவர்கள் தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் இந்த செயலியின் மூலம் பெறுவர் இதனைத் தொடர்ந்து நான்கு கட்டமாகத் தடுப்பூசி பணி மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ளது. 

முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்பு பிரிவில் முன்னிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் காலையில் 100 பேர், மாலையில் 100 பேர் என நாள் ஒன்றுக்கு 200 பேருக்குத் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

இது குறித்து, உலக சுகாதார மைய தென்மண்டல கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் கூறியது: 

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக சுமார் 15 ஆயிரம் மருத்து மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி - மார்ச் ஆகிய மாதங்களில் மருத்துவ மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கும், ஏப்ரல் - மே ஆகிய மாதங்களில் முன்களப் பணியாளர்களுக்கும், மே-ஜூன் ஆகிய மாதங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் தடுப்பூசி போடுவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்கள் குறித்தும், அவற்றில் உள்ள இடவசதி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT