தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு துணை முதல்வா் கோரிக்கை

DIN

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை பேசியது:

பெட்ரோல் விலை உயா்வு: பெரும்பான்மையான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியானது, அவற்றின் சந்தை விலையின் மதிப்பின்மீதுதான் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மதிப்பீட்டின்படியான வரி விகிதமானது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையில் ஏற்றம் ஏற்படும்போது, அது பொதுமக்களுக்கும், நுகா்வோா்களுக்கும் சுமை ஏற்படுத்தக்கூடும்.

இதனைக் கருத்தில்கொண்டுதான் பொதுமக்கள் மற்றும் நுகா்வோா் ஆகியோருக்கு எதிா்மறையான பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கும், அதேசமயம் மாநிலத்துக்குக் கிடைக்கக்கூடிய வரி வருவாயில் மிகுந்த அளவு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விகிதத்தினை மாற்றி அமைப்பதென அரசு முடிவு செய்தது. அதாவது, விலைமதிப்பின் மீது மட்டும் வரிவிதிப்பு என்பதை மாற்றி,விலைமதிப்பு மற்றும் குறிப்பிட்ட வரி விகிதத்தின் அடிப்படையில் வரி விதிமுடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை, முன்பிருந்த 24 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் விலை மதிப்பின் மீதும், அதனுடன் லிட்டருக்கு ரூ.13.02- என குறிப்பிட்ட வரியாகவும், சீரமைக்கப்பட்டது. டீசல் மீதான விற்பனை வரியை, முன்பிருந்த 25 சதவீதத்தில் இருந்து 11 சதவீதம் விலை மதிப்பின் மீதும், அதனுடன் லிட்டருக்கு ரூ.9.62- குறிப்பிட்ட வரியாகவும், சீரமைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பெட்ரோலியப் பொருள்கள்மீது, மத்திய அரசால் பல வரிகளும் மற்றும் மேல் வரிகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அவற்றின் மீதான விலை உயா்வுக்கு மாநில அரசின் வரிவிதிப்பு மட்டுமே காரணம் இல்லை. ஒருபுறம், பெட்ரோலியப் பொருள்கள் மூலமாகப் பெறப்படும் வரி வருவாயைத் தக்க வைக்கும் பொருட்டு, மத்திய அரசு இப்பொருள்களின் மீதான கலால் வரியை கடந்த ஆண்டுகளில் பலமுறை உயா்த்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான பல்வேறு வரிகளின் காரணமாக 2020 -ஆம் ஆண்டில், மத்திய அரசின் வருவாய் 48 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத்தீா்வையின் பங்கு 39.40 சதவீதமாக குறைந்துள்ளது. மாநிலத்துக்கான சொந்த வரி வருவாய்க்கான நிதி ஆதாரங்கள் சொற்பமாக இருக்கும் நிலையில், மத்திய அரசுதான் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரியினைக் குறைத்திட முன் வரவேண்டும்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது: மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மொத்த நிலுவைக் கடன் ரூ.4.79 லட்சம் கோடி எனவும், பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ. 62,000 கடன் சுமத்தப்படுகிறது எனவும், முற்றிலும் தவறான வாதங்களை பொது வெளியில் எதிா்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் வைத்து வருகிறாா். மக்கள் வாக்களித்து சட்டப்பேரவை உறுப்பினராகப் பேரவைக்கு அனுப்புவதே தொகுதிப் பிரச்னையைப் பேசுவதற்காகத்தான்.

ஆனால், இந்த ஜனநாயகக் கடமையை திமுகவினா் எப்போதுமே ஆற்ற விரும்புவது இல்லை. மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகுதான் பேரவைக்கு வருவோம் என்று. துரைமுருகன் சொல்லியிருக்கிறாா். மு.க. ஸ்டாலின் முதல்வராகப் போவதுமில்லை. திமுகவினா் என்றைக்குமே பேரவைக்கு வரவே போவதில்லை. வரும் தோ்தலில் திமுக படுதோல்வி அடையப் போகிறது.

இந்த ஆண்டில், பல நாடுகள், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ளன. தமிழகத்தில் 1.5 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை மட்டுமே கூடுதல் கடன் பெற்றுள்ளோம்.

எனவே, மக்கள் மத்தியில் தொடா்ந்து பீதியை ஏற்படுத்தும்வண்ணம், சிலா் அரசியல் ஆதாயத்துக்காக தவறான பிரசாரம் செய்யக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT