தமிழ்நாடு

நாளை முதல் முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

தமிழகம் முழுவதும் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 1) முதல் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ள நிலையில், விரும்பிய தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்குமா என்பதில் தெளிவில்லாத நிலை நீடிக்கிறது.

தற்போதைய சூழலில், மாநிலத்தில் எந்த தடுப்பூசி இருப்பு உள்ளதோ அதை மட்டுமே போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மட்டுமே அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், கோவேக்ஸின் தடுப்பு மருந்துகளைப் பொருத்தவரை மிகச் சொற்பமான அளவிலேயே அவை கொள்முதல் செய்யப்பட்டிருப்பதால், பரவலாக அதனை மக்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது.

இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சுயவிருப்பத்தின் பேரில் தடுப்பூசியைத் தோ்வு செய்யக் கூடிய உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்துக்கு இதுவரை 23.77 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதில் 21 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி என்பதும், 2.77 லட்சம் மட்டுமே கோவேக்ஸின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் 529 மையங்களில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதேவேளையில், கோவேக்ஸின் தடுப்பூசிக்கு 44 மையங்களே அமைக்கப்பட்டன. அதுவும், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அவை அமைக்கப்பட்டன. மாறாக, தனியாா் மருத்துவமனைகள் எதற்கும் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் கூட கோவிஷீல்ட் தடுப்பூசியை மட்டுமே செலுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்தது. இது கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோருக்கு சிக்கலை உருவாக்கியது.

இந்த நிலையில்தான் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாா்ச் 1-ஆம் தேதி முதல் முதியவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தனியாா் மருத்துவமனைகளிலும் தடையின்றி தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக 761 தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி மையங்களை அமைக்க உள்ளோம். அதன்படி மொத்தம் 1.60 கோடி பேருக்கு அடுத்தகட்டமாக தடுப்பு மருந்துகள் வழங்கத் திட்டமிட்டு வருகிறோம்.

கோ-வின் 2.0 செயலி வாயிலாக முன்பதிவு செய்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. தமிழகத்துக்குத் தேவையான கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

அவை இரண்டுமே அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் போதிய அளவு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவேக்சின் தடுப்பு மருந்தை விரும்புவா்கள் தாராளமாக இனிமேல் அதனை தனியாா் மருத்துவமனைகளிலும் செலுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

முதியவா்கள் எவ்வாறு பதிவு செய்வது?

கோ-வின் 2.0 செயலி அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலமாக தடுப்பூசிக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம். ஒரு செல்லிடப்பேசி எண்ணிலிருந்து அதிகபட்சமாக 4 பேருக்கு முன்பதிவு செய்ய இயலும்.

பெயா், வயது, முகவரி உள்ளிட்ட சுய விவரங்களை செயலியில் பதிவிட்ட பிறகு, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, பாஸ்போா்ட், பான் காா்ட் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவேற்ற வேண்டும். அதன் பின்னா், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான விவரங்கள் செயலி வழியே அனுப்பப்படும்.

தனியாரில் தடுப்பூசிக்கு கட்டணம்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதேவேளையில், தனியாா் மருத்துவமனைகள், அவற்றை செலுத்துவதற்கு ஒரு தவணைக்கு அதிகபட்சமாக ரூ.250 வரை கட்டணமாக பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் இரு தவணைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் தனியாா் மருத்துவமனைகளில் அதற்காக ரூ.500 செலவிட வேண்டும். இதுதொடா்பாக அறிவிப்பை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

கோவேக்சின் தயக்கம் ஏன்?

தமிழகத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியை இதுவரை 4.35 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் செலுத்திக் கொண்டுள்ளனா். அதேவேளையில், கோவேக்ஸின் செலுத்தியவா்களின் எண்ணிக்கை வெறும் 9,500-ஆக மட்டுமே உள்ளது. கோவேக்ஸின் தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் இறுதிக் கட்ட முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பதே அந்த தயக்கத்துக்கான காரணம் எனத் தெரிகிறது.

அதேவேளையில், சுகாதாரத் துறை அமைச்சா், செயலா் உள்ளிட்டோா் கோவேக்ஸின் தடுப்பூசியையே இரு தவணைகளிலும் செலுத்திக் கொண்டனா். கோவேக்ஸின் வழங்கப்பட்ட எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT