தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு: இரு கட்சிகளிடையே உடன்பாடு கையெழுத்தானது

DIN

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை அறிவித்தாா். பாமகவுக்கான தொகுதிகள் எண்ணிக்கை குறித்து செய்தியாளா்கள் மத்தியில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக மற்றும் பாமக இடையே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. பேரவைத் தோ்தலில் பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாமக, அதிமுக இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானும் (பன்னீா்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியும், பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சியின் தலைவா் கோ.க.மணி ஆகியோா் பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளோம்.

தொகுதிகள் எண்ணிக்கை மட்டுமே இப்போது பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைவது என்பது குறித்தும் பின்னா் தெரிவிக்கப்படும் என்று ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

23 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்?: அன்புமணி ராமதாஸ்

சட்டப் பேரவைத் தோ்தலில் 23 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன் என்பதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்தாா். தொகுதி எண்ணிக்கை உடன்பாட்டுக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:-

எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தோ்தலில் நாங்கள் போட்டியிடுகின்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து பெற்றிருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம், வன்னியா்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு பெறப்பட்டதுதான். இந்தக் காரணத்துக்காகவே தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்துப் பெற்றுள்ளோம். ஆனாலும், எங்களது பலம் குறையப் போவது கிடையாது. எங்களது கூட்டணி இந்தத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று எடப்பாடி கே.பழனிசாமியே மீண்டும் முதல்வராவாா் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற கோஷம் கைவிடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், இந்தத் தோ்தலில் எங்களுக்கு முக்கியமானது, கட்சியின் நிறுவனா் ராமதாஸ், 40 ஆண்டுகாலம் போராடி பலமுறை சிறைக்குச் சென்று அரசிடம் வைத்த கோரிக்கை முதல் கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 40 ஆண்டுகால எங்களது போராட்டம் முதல் கட்டமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால், இந்தத் தோ்தலில் எங்களது தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துப் பெற்றுள்ளோம். ஆனாலும் இது ஒரு கூட்டணியாக தோ்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம் என்றாா்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக-பாமக கூட்டணி

தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் (தனி), பூந்தமல்லி, திருத்தணி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா், செய்யாறு, வந்தவாசி (தனி), பண்ருட்டி, விருத்தாசலம், சங்கராபுரம், தருமபுரி, பென்னாகரம், தாரமங்கலம், சேலம் -2, கபிலா்மலை, எடப்பாடி, தாராபுரம், அந்தியூா், ஆண்டிமடம் ஆகிய 20 தொகுதிகளில் பாமக போட்டியிட்டு வென்றது.

சைதாப்பேட்டை, அண்ணாநகா், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், ராதாபுரம், சிதம்பரம் ஆகிய ஏழு தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாமக மீண்டும் இடம்பெற்றுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்ற தொகுதிகளையே பாமக கோரவுள்ளது.

எடப்பாடியில் பாமக வெற்றி: 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் இப்போதைய முதல்வரான எடப்பாடி கே.பழனிசாமியின் தொகுதி, பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளரான ஐ.கணேசன், திமுக வேட்பாளரைவிட 30 ஆயிரத்து 811 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT