தமிழ்நாடு

ஏலகிரி மலையில் காட்டுத் தீ: தீயைக் கட்டுப்படுத்த வனத் துறையினர் தீவிரம்

28th Feb 2021 09:50 PM

ADVERTISEMENT


திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மர்ம நபர்கள் வைத்த தீயால் காட்டுத் தீ பரவி காட்டில் உள்ள அரியவகை மரங்கள் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின.

தீயைக் கட்டுப்படுத்த வனத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில், சின்னா கவுண்டனூர் மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் மர்ம நபர்கள் வைத்த தீயால் காட்டுத் தீ மளமளவென பரவியது. காட்டின் ஒரு பகுதியில் அரியவகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள் காட்டில் வசிக்கும் சிறிய வகை உயிரினங்கள் ஆகியவை எரிந்து நாசமாகின.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் திருப்பத்தூர் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

தகவலின் பேரில் வனச்சரக அலுவலர் எம். பிரபு தலைமையில் வனவர் பரந்தாமன் உள்ளிட்ட  வனத் துறையினர் காட்டுத் தீயை பொதுமக்கள் உதவியுடன் அணைக்க முயன்றனர்.

ஆனால் காட்டுத் தீயானது மளமளவென அதிகளவில் பரவியதால் அவர்கள் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் எம்.பிரபு கூறியது:

"யார் தீயை வைத்து இருப்பார்கள் என்பது குறித்து மக்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீ வைத்தவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

மேலும், வனத் துறையினரின் அனுமதி இன்றி காட்டுக்குள் யாரும் செல்லக் கூடாது.

ஏற்கெனவே, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்" என்றார் அவர்.

Tags : Yelagiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT