தமிழ்நாடு

அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் அறிவிப்பு

 நமது நிருபர்

தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்பால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 
எந்தத் தேர்தல் காலத்திலும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுகவும் திமுகவும் 6 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன என்றாலும், தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்பால் அரசியல் கட்சிகள் நிலைகுலைந்து போயின.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம் வந்து தேர்தல் பணிகளைப் பார்வையிட்டுச் சென்றார். 
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கும் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திரமோடி கூறியிருந்தார்.
இதனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அலட்சியம் காட்டி வந்தன.
இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110-ஆவது விதியின் கீழ் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தியும், 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தார்.
இந்த வகையில் கூட்டத்தொடரின் மீதி நாள்களான  வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலை தேர்தல் தேதியை அறிவிக்கப் போவதாக தகவல் வெளியானது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிட முடியாது என்பதால், அவசர அவசரமாக அறிவிப்புகளை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
கூட்டுறவு வங்கிகளில்  விவசாயிகள் பெற்ற நகைக் கடன்கள் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் வாங்கிய கடன் ரத்து ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று, பேரவையின் அன்றைய தின அவை நிகழ்ச்சிகள்  முடிவடைய இருந்தன.
ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்ததைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் மதியம் தொடரச் செய்து,  வன்னியர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் இருந்தது. கூட்டணி பேச்சுவார்த்தைத் தொடங்க வேண்டும் என்று தேமுதிக தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தது. ஆனால், அதிமுக தரப்பில் எந்தவித முன்னெடுப்பும் எடுக்கப்படாத நிலை இருந்தது. 
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாமகவுடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்திருக்கிறது. ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளது.
தேர்தல் பணிகளை திமுக தொடங்கி இருந்தாலும் கூட்டணி குறித்து இறுதி செய்யப்படாத நிலை நீடித்து வந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் திமுக வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தரப்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் தரப்பில் கே.எஸ்.அழகிரி, உம்மன்சாண்டி, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒதுக்கியதுபோல 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது. ஆனால், திமுக தரப்பில் 20 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கறாராகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், மேலிடத்தில் பேசிவிட்டு வருவதாக உம்மன்சாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்துவிட்டு தில்லி சென்றுள்ளனர்.
இதற்கிடையில் தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்துவிட்டதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. தேர்தல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையுடன்  விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்வு காண்பதற்கான முயற்சியிலும் திமுக உள்ளது. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளையும் ஓரிரு நாளில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
பொதுவாக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை இறுதி செய்த பிறகு, கூட்டணிக் கட்சித் தலைவர்களை  ஒவ்வொரு மாவட்டமாக அழைத்துச் சென்று பிரசாரத்தில் திமுக, அதிமுக தலைவர்கள் ஈடுபடுவர். ஆனால், இந்த முறை கூட்டணியை உறுதி செய்யாமல் அதிமுகவுக்கு வாக்கு கோரி எடப்பாடி பழனிசாமியும், திமுகவுக்கு வாக்கு கோரி மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்து வந்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்து அவரும் தனியாக பிரசாரம் செய்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனியாகப் பிரசாரம் செய்தார். அதுபோல இனி தொடர முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. 
சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்வதற்கு இன்னும் 34 நாள்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் கூட்டணி அமைத்து மக்கள் மனதில் அந்தக் கூட்டணியை இடம்பெறச் செய்ய வேண்டிய நெருக்கடியான நிலைக்கு அரசியல் கட்சிகள் வந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT