தமிழ்நாடு

மு.க. ஸ்டாலின் முதல்வராகப் போவதில்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

27th Feb 2021 06:02 PM

ADVERTISEMENT

மு.க. ஸ்டாலின் முதல்வராகப் போவதில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

கலைவாணர் அரங்கில், சட்டமன்றப் பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து ஆற்றிய உரை, தமிழக அரசு உள்ளார்ந்த முனைப்புடன் செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களாலும், அறிவித்துள்ள சமூக மேம்பாட்டு திட்டங்களாலும், தமிழக மக்கள் பெருவாரியாக பயன்பெற்று தமிழக அரசுக்கும், இவ்வரசை அமைத்துள்ள அதிமுகவுக்கும் மாபெரும் மக்கள் செல்வாக்கு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதனை திசை திருப்பும் வகையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மொத்த நிலுவைக் கடன் 4.79 இலட்சம் கோடி ரூபாய் எனவும், பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62,000 ரூபாய் கடன் சுமத்தப்படுகிறது எனவும், முற்றிலும் தவறான வாதங்களை பொது வெளியில் எதிர்க்கட்சித் தலைவரான, மு.க. ஸ்டாலின் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். 

ஸ்டாலின் தனது வாதத்தை இப்பேரவைக்கு வந்து நேருக்கு நேராக என் முன் வைத்து, நான் தருகின்ற பதிலை அவர் கேட்க முடியும். ஆனால், திமுக.-வின் வழக்கப்படி, அவர் வெளிநடப்பு அவை புறக்கணிப்பு செய்துவிட்டார் என்பதுதான் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராகி, இப்பேரவைக்கு அனுப்புவதே தொகுதிப் பிரச்னையை இந்த மாமன்றத்தில் பேசுவதற்காகத்தான். ஆனால், இந்த ஜனநாயகக் கடமையை திமுக-வினர் என்றுமே மதிப்பதில்லை. ஏதோ சுற்றுலாவிற்கு வருவதுபோல இந்த மாமன்றத்திற்கு வருகிறார்கள். இங்கே உட்கார்ந்து பலவாறு சிரிக்கிறார்கள், பேசுகிறார்கள். வந்ததும் வெளிநடப்பு என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறார்கள். மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பிறகுதான் பேரவைக்கு வருவோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சொல்லியிருக்கிறார். 

அத்தைக்கு மீசை முளைக்கப் போவதும் இல்லை அந்த அத்தை உருமாறி சித்தப்பா ஆகப்போவதும் இல்லை. மு.க. ஸ்டாலின் முதல்வராகப் போவதுமில்லை. திமுக.வினர் என்றைக்குமே சட்டமன்றத்திற்கு வரவே போவதில்லை. தேர்தலில் அவர்கள் படுதோல்வியை திமுக. சந்திக்கப் போகிறது என்பதை உறுதியாகத் தெரிவித்து எனது விளக்கங்களை இப்பேரவையின் முன் வைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். தி.மு.க. ஆட்சிக் காலமான 2006-2007 ஆம் ஆண்டு முதல், 2010-2011 ஆம் ஆண்டு வரை, மொத்தம் கடனாகப் பெறப்பட்ட தொகை 44,084 கோடி ரூபாய் மட்டுமே எனவும், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் கடன் மட்டும் 3.55 இலட்சம் கோடி ரூபாய் வாங்கப்பட்டதாகவும், இவை தேவையற்ற செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது எனவும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். இவை அனைத்தும் முற்றிலும் தவறான வாதங்கள் என்பதோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூறப்படுகின்ற விதண்டாவாதம் ஆகும் என்றார்.
 

ADVERTISEMENT

Tags : MKStalin
ADVERTISEMENT
ADVERTISEMENT