தமிழ்நாடு

சூரப்பா மீதான விசாரணை அறிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான  விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தாக்கல் செய்த மனுவில்,  அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்த நான் எடுத்த முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுங்கட்சியினருக்கு அடிபணிய மறுத்ததால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி புகார்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் எனக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்க எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. ஆளுநரால் நியமிக்கப்பட்ட எனக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக ஆளுநரின் கருத்தையோ, ஆலோசனைகளையோ பெறவில்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை முகாந்திரமோ, ஆதாரமோ இல்லை. எனவே உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.  

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கடந்த 2018-ஆம் ஆண்டு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். கடந்த 2020-ஆம் ஆண்டு வரை சூரப்பாவுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அண்ணா பல்கலைகழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததால், இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் கொண்ட ஆளுநருக்கு தான், நீக்கவும் அதிகாரம் உள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அரசுக்கு அடிபணிய மறுத்ததாலும் உள்நோக்கத்துடன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம், சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அவருக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பணிக்காலம் முடிந்த பின் எப்படி நீக்க முடியும். 1000 ஆவணங்கள், 100 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதால் இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், மனுதாரர் கூறுவது போல், அரியர் தேர்வு ரத்து, சீர்மிகு கல்வி நிறுவனமாக அறிவிக்க முயற்சித்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடவில்லை.

விசாரணையை சந்திக்க அவர் ஏன் அச்சம் கொள்ள வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.  விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர். விசாரணை ஆணையம், அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். இந்த மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். அப்போது பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்,  துணைவேந்தருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைத்தது குறித்து ஆளுநர் வேதனை தெரிவித்ததாக கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்வி நிறுவனத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு, சுமூக தீர்வு காண அறிவுறுத்தினார். விசாரணை அறிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். மேலும், இந்த மனுவுக்கு வரும் மார்ச் 15 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT