2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் கோ.பிரகாஷ் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக 26.02.2021 அன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் கோ.பிரகாஷ் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் இன்று (27.02.2021) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் அவர்களும், மாநகர காவல் ஆணையாளர் அவர்களும் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ள 48 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 48 பறக்கும் படை குழுக்கள், 16 வீடியோ கண்காணிப்பு குழுக்களின் செயல்பாட்டினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 குறித்த தேர்தல் அறிவிப்பினை கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ளவாறு அறிவித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியீடு 12.03.2021
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் 12.03.2021
வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 19.03.2021
வேட்பு மனுக்கள் பரிசீலனை 20.03.2021
மனுக்கள் திரும்பப்பெறுதல் 22.03.2021
இறுதி வேட்பாளர் பட்டியல் 22.03.2021
வாக்குப் பதிவு நாள் 06.04.2021
வாக்கு எண்ணிக்கை நாள் 02.05.2021
மேலும், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அரசு கட்டடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தும் 24 மணிநேரத்திற்குள் அழிக்கப்படும். பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் 48 மணிநேரத்திற்குள் அழிக்கப்படும். தனியார் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்களை 72 மணிநேரத்திற்குள் அழிக்கப்படும். இப்பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மாலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021க்கு சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு, 16 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 16 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தின் மொத்த வாக்குச்சாவடிகள் 5911 ஆகும். இதில் 2157 துணை வாக்குச்சாவடிகள் அடங்கும். இது கடந்த தேர்தலில் இருந்த 45% கூடுதலாகும். சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் 29,000 வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட 40,000க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் புதிய நடைமுறையாக மாற்றுத்திறனாளிகளுக்கும் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் தபால் வாக்குகள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அறிகுறிகளுடன் உள்ள நபர்களுக்கும் தபால் வாக்கு வழங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மேற்படி பறக்கும் படை மற்றும் குழுக்களை கண்காணிப்பதற்காக ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அக்கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ல் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒருங்கிணைப்பாளர்கள், 17 அலுவலர்கள் மேற்படி பணிகளை சீராக கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, இந்தத் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.