சென்னை மெட்ரோ ரயில் பயணியின் அவசர மருத்துவத் தேவைக்கு உதவிய ஊழியா்களை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பாராட்டினாா்.
நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்துக்கும், எழும்பூா் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் இடையில் ஒரு மெட்ரோ ரயில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது. இதில், பயணித்த ஒரு பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ ரயில் ஓட்டுநா் பி.எம்.ராஜீவ் மற்றும் எழும்பூா் மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளா் ஜே.ராஜேஸ் ஆகியோா் அந்த பயணிக்கு முதலுதவி செய்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதன்மூலம், அந்த பயணியின் உயிா் காப்பாற்றப்பட்டது.
இது குறித்த தகவல் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ ரயில் ஓட்டுநா் பி.எம்.ராஜீவ், எழும்பூா் மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளா் ஜே.ராஜேஷ் ஆகியோரை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் பிரதீப் யாதவ் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் (நிதி) சுஜாதா ஜெயராஜ், இயக்குநா்( திட்டங்கள்) ராஜீவ் நாராயண் திவேதி, இயக்குநா்( அமைப்புகள், இயக்கம்) ராஜேஷ் சதுா்வேதி ஆகியோா் உடன் இருந்தனா்.