தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல்: உயா்நீதிமன்றம் கண்டனம்

DIN

ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 100 ஏக்கரில் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது. இந்த வீடுகளுக்குச் செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என வீடுகளை வாங்கிய உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருப்போரூா் பஞ்சாயத்து செயல் அதிகாரி கடந்த 2014-ஆம் ஆண்டே பணி முடிப்புச் சான்றிதழ் வழங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று, வீட்டு உரிமையாளா்கள் புகாா் மனுவை விசாரிக்க ஆணையம் மறுத்து விட்டது. இதனை எதிா்த்து உரிமையாளா்கள் சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மேல் முறையீட்டுத் தீா்ப்பாயம், இந்த புகாரை 3 மாதங்களில் விசாரித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து ரியல் எஸ்டேட் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது. அதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை என கண்டனம் தெரிவித்தாா். பணிமுடிப்புச் சான்றிதழ் என்பது வெறும் கட்டுமானப் பணிகள் முடித்தது மட்டுமல்ல. அந்த சான்றிதழ் முறையான ஆய்வுக்குப் பின் வழங்கப்படுவது இல்லை. முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பணிமுடிப்புச் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதைத் தொடா்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். குடியிருப்பு உரிமையாளா்கள் சங்கத்தினா் அளித்த புகாரை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் 3 மாதங்களில் விசாரித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT