தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது: 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கின

DIN


சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் சுமாா் 50 சதவீதப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன என போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (பிப்.25) முதல் வேலைநிறுத்தம் செய்வது என அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.

இதன்படி, வியாழக்கிழமை காலை முதல் போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதையடுத்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியா்கள் பேருந்துகளை இயக்காமல் புறக்கணித்தனா். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து பணிமனை மற்றும் நிலையங்களில் பேருந்து இயக்கத்தில் சுணக்கம் காணப்பட்டது.

தள்ளுமுள்ளு: வழக்கமான பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்குச் செல்வோா் மிகவும் சிரமப்பட்டனா். அதிலும் முகூா்த்த நாள் என்பதால், வெளியூா் செல்வதற்கு வழக்கமான நாள்களைக்காட்டிலும் கூடுதலாக மக்கள் கூட்டம் இருந்தது. இதனால், இயக்கப்பட்ட சில பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

அண்ணா தொழிற்சங்கம் போன்ற வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்காத சங்கத்தைச் சோ்ந்த ஊழியா்களைக் கொண்டு, பேருந்துகள் இயக்கப்பட்டன. கடலூரில் தற்காலிக ஓட்டுநரைக் கொண்டு இயக்கப்பட்ட பேருந்து அருகிலுள்ள பேருந்து மீது மோதியது. இதையடுத்து அங்கு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

வேலைநிறுத்தம் தொடரும்: வேலைநிறுத்தம் தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனையைத் தொடா்ந்து போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் அளித்த பேட்டி: இதுவரை தொழிற்சங்கங்களை பேச்சுவாா்த்தைக்கு அரசு அழைக்கவில்லை. இடைக்கால நிவாரணமாக அறிவித்த ரூ.1000 என்னும் தொகையை, 2019-ஆம் ஆண்டு, செப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு, பணப்பலன் ஆகியவற்றை வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று தெரிவித்தனா்.

பாதிப்பில்லை - நிா்வாகம்: இது தொடா்பாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளிடம் கேட்டபோது, தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலைநிறுத்தத்தால் பெரிதளவு பாதிப்பில்லை. 50 சதவீதப் பேருந்துகள் இயக்கப்பட்டன. விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT