தமிழ்நாடு

சேலம்: ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

24th Feb 2021 04:26 PM

ADVERTISEMENT

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் அண்ணா பூங்காவில் உள்ள மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசின் சார்பில் ஆட்சியர் சி.அ.ராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த 2019 ஜனவரி 16 ஆம் தேதி மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மணிமண்டபத்தினை திறந்து வைத்தார். பின்னர் எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் தேதியும், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி மணிமண்டபத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்தார்.

முதல்வரின் உத்தரவின்படி சேலம், அண்ணா பூங்காவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மணிமண்டபத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா அரசின் சார்பில் புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

ADVERTISEMENT

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தலைமையேற்று, மணிமண்டபத்தில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவிற்கு சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ ஏ.பி.சக்திவேல் முன்னிலை வகித்தார்.

மணிமண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், சேலம் வருவாய்க் கோட்டாட்சியர் சி. மாறன், சேலம் மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. அண்ணாதுரை, வட்டாட்சியர்கள் கோபாலகிருஷ்மன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங்கடாசலம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கி. மோகன்ராஜ் (செய்தி),  கா.கிருஷ்ணமூர்த்தி (விளம்பரம்), பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் (மின் பிரிவு) எஸ்.ஸ்ரீனிவாசன் உட்பட அரசு அலுவலர்கள், ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை:

அதேபோல சேலம் மாநகர அதிமுக மாவட்டம் சார்பில் அவைத் தலைவர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் எம்எல்ஏ ஏ.பி.சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜு, முன்னாள் மேயர் செளண்டப்பன் உள்ளிட்ட கட்சியினர் ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலம் மாநகர மாவட்டம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் செயலாளர் அசோக்குமார் தலைமையில் சேலம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த முதல் குழந்தைக்கு ஒன்றரை பவுன் தங்க சங்கிலி வழங்கப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது பிறந்த குழந்தைக்கு கால் பவுன் மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு கால் கொலுசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT