தமிழ்நாடு

பேரவைக்குள் குட்கா: பேரவை செயலாளருக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

24th Feb 2021 01:01 PM

ADVERTISEMENT

 

சென்னை: சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் மீதான  உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட தீர்ப்பு நகல்  இல்லாமல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய சட்டப்பேரவை செயலாளருக்கு  உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி நோட்டீஸை ரத்து செய்தது. 

இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய உரிமை மீறல் குழு, திமுக உறுப்பினர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா,  நோட்டீசை மீண்டும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தீர்ப்பு வழங்கிய நிலையில், இதுவரை நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட அசல் தீர்ப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட அசல் தீர்ப்பின் நகல் இல்லாமல் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி சட்டப்பேரவை செயலாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சத்திகுமார் ஆகியோர்  அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அவரது சான்றளிக்கப்பட தீர்ப்பு நகல்  இல்லாமலேயே மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
 

Tags : high court stalin dmk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT