தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்க மாவட்ட நுகர்வோர் அமைப்புக் கோரிக்கை

24th Feb 2021 11:21 AM

ADVERTISEMENT

 

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள், அதன் மீது விதித்துள்ள வரிகளைப் பாதியாக குறைத்திட வேண்டுமென, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரியின் காரணமாக, கடுமையான விலை உயர்வைப் பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே விலையைக் குறைத்திடும் வகையில், மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகளைக் குறைத்திட வேண்டுமென திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக இந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் ஈஎம்ஏ.ரஹீம், புதன்கிழமை இந்தியப் பிரதமருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது, 

ADVERTISEMENT

தற்போது சில மாநிலங்களில், பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டிவிட்டதாகத் தெரிகிறது. இந்த நிலை விரைவில், மற்ற மாநிலங்களிலும் ஏற்படும். மத்திய, மாநில அரசுகள் தங்களது வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கு, முதலில் கைவைப்பது பெட்ரோல், டீசல் மீதுதான். முன்பெல்லாம், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம், கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து விட்டது. அதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனத் தெரிவித்தனர். 

ஆனால் தற்போது, அவ்வப்போது மத்திய, மாநில அரசுகள் விதிக்கின்ற வரிகளால், கடுமையான விலை உயர்வைப் பொதுமக்கள் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 2013ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய் 122 டாலராக இருந்த நேரத்தில் கூட, பெட்ரோல் விலை ரூபாய் 70லிருந்து, 80க்குள் தான் இருந்தது. ஆனால் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 63.38 ஆக உள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்டது. தற்போது உள்ள பெட்ரோல், டீசல் விலையில் கச்சா எண்ணெயின் விலை 40 சதவீதம் தான். மீதமுள்ள 60 சதவீதம், மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் தான். 

உலகளவில், கச்சா எண்ணெயின் விலைக் குறைந்து, பெட்ரோல், டீசல் விலைக் குறைந்த போது கூட, மத்திய அரசு, விலைக் குறைவைப் பொதுமக்கள் அனுபவிக்காத வகையில், வரியை உயர்த்திவிட்டது. 

தற்போதும், பெட்ரோல், டீசல் விலையில், 30 சதவீதம் மத்திய அரசு வரியும், 30 சதவீதம் மாநில அரசு வரியும் விதித்துள்ளது. இதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள், ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த,  பொதுமக்களின் அனைத்துத் தரப்பினரையும், ஒட்டுமொத்தமாகப் பாதிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, பேருந்து கட்டணம், புகைவண்டிக்கட்டணம்,  சரக்கு வாகன வாடகை உயர்வு போன்றவற்றின் காரணமாக, அனைத்துப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. தற்போது சின்ன வெங்காயம், ஒரு கிலோ ரூபாய் 150ஐத் தொட்டுக்கொண்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உள்பட அனைவரும்,  கரோனாத் தொற்றின் காரணமாக, இருசக்கர வாகனத்தை உபயோகிப்பவர்களின், எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இவ்வாறு பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற நிலையில் உயர்ந்து வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திடும் வகையில், அதன் மீது உள்ள வரிகளைப் பாதியாகக் குறைத்திட வேண்டுமெனக் கோரிக்கை  விடுத்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT